லண்டனில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்… போலீசார் மீது தாக்குதல்!

லண்டனில் நேற்று நள்ளிரவில் திடீரென்று அனுமதியின்றி இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் மக்கள் அவதியுற்றனர். இதை அறிந்து விசாரிக்க வந்த போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். கடந்த ஒரு வாரத்தில் லண்டனில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

லண்டன் ஃபின்ஸ்பெரி பார்க், உட்பெரி டவுன் எஸ்டேட் பகுதியில் 2020  ஜூலை 17 வெள்ளிக்கிழமை இரவு 11 மணி அளவில் திடீரென்று இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுவதாகவும், தொந்தரவாக இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசில் புகார் செய்தனர். இதை அறிந்து மெட்ரோபாலிடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்த வந்தனர்.

அப்போது அவர்கள் மீது பாட்டில்கள், சைக்கிள் உள்ளிட்ட கையில் கிடைத்த பொருளை எல்லாம் தூக்கி வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் போலீசாருக்கு எதிராக கலவரத்திலும் ஈடுபட்டனர். தடுப்புகளை உடைப்பது, கல்வீசுவது என்று அவர்களின் செயல் எல்லை மீறி சென்றது. இது தொடர்பாக 18 மற்றும் 19 வயது இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரிக்கு விலா எலும்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றொருவருக்கு மூட்டுப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பிரதான சாலையின் குறுக்காக போலீசார் வரிசையாக அணிவகுத்து வருகின்றனர். அவர்களுக்கு முன்புறம் பல இளைஞர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதவர்கள் போல நடந்து செல்லும் வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

இது குறித்து காவல்துறை உதவி ஆணையர் லூசி டிஓர்சி கூறுகையில், “இதுபோன்று அனுமதியற்ற நிகழ்வுகள் நடத்தக்கூடாது என்று போலீஸ் எச்சரக்கைவிடுத்துள்ளது. அதையும் மீறி இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை காவல்துறை ஏற்றுக்கொள்ளாது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் சமூகத்தில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், கோவிட் 19 பரவலுக்கும் வழிவகுக்கும். எனவே, இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துபவர்கள், பங்கேற்பவர்கள் ஒன்றுக்கு பலமுறை யோசித்து செயல்படக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தலைநகர் லண்டனில் கடந்த ஒரு வாரமாக சட்டவிரோத நிகழ்வுகள். அனுமதியற்ற இசை நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டு வருவதாக புகார்கள் தொடர்ந்து போலீசாருக்கு வந்தபடியே உள்ளது. கடந்த எட்டு நாட்களில் ஏழு பேர் வெவ்வேறு தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர். லண்டனில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்வது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk