கார்லைல்: ஊழியருக்கு ஒருவருக்கு கொரோனா… வில்லியம் ரூஃபஸ் வெதர்ஸ்பூன் பப் மூடப்பட்டது!

கார்லைல் வில்லியம் ரூஃபஸ் வெதர்ஸ்பூன் பப் (Image: Google Map)

கார்லைல் வில்லியம் ரூஃபஸ் வெதர்ஸ்பூன் பப்பில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர்பில் இருந்த 24 பேர் குவாரன்டைன் செய்யப்பட்டுள்ளனர். இதனால், பப் மூடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பல பகுதிகளில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஷாப்பிங் சென்டர்கள், ரெஸ்டாரண்ட் உள்ளிட்டவை தற்காலிகமாக மூடப்பட்டு வருவதாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. தற்போது கார்லைலில் உள்ள பிரபலமான பப் ஒன்றில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பப் மூடப்பட்டுள்ளது.

ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து. அவருடன் தொடர்பில் இருந்த 24 பேர் கட்டாய குவரான்டைனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் வராத நிலையில், 24 பேரும் பயத்தில் உள்ளனர்.

கார்லைலில் மருத்துவப் பணியாளர்கள் வீடு தோறும் வந்து கொரோனா பரிசோதனை செய்கின்றனர். இந்த பப்பில் வேலை செய்தவருக்கு கடந்த ஜூலை 27ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், 30ம் தேதிதான் முடிவு வந்தது. அதில் கொரோனா பாசிடிவ் உறுதியானது. அப்படி என்றால் மூன்று நாட்கள் அவர் கொரோனா தொற்றுடனே இருந்துள்ளார். அவர் மூலம் எத்தனை பேருக்கு கொரோனா பரவியதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதே நேரத்தில், இந்த பப்புக்கு வந்த பொது மக்களுக்கு தொற்று பரவியது தொடர்பான தகவல் இல்லை.

பப் உள்ளிட்டவற்றுக்கு வரும் பொது மக்களின் பெயர், முகவரியை குறித்து வைத்துக்கொள்ளும்படி அரசு அறிவுரை கூறியிருந்தது. ஆனால், இந்த பப் அப்படி எதையும் செய்யவில்லை. இதனால், இந்த பப்புக்கு வந்த மக்களைக் கண்டறிவது சவாலான காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பப் மூடப்பட்டது குறித்து அதன் நிர்வாகிகள் கூறுகையில், “இந்த பப்பை மூடும்படி உள்ளாட்சி நிர்வாகம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. நாங்களாக முன்வந்து தற்காலிகமாக இதை மூடுகிறோம். உள்ளாட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் எங்களுக்கு போதுமான ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். ஊழியர்கள் நலமுடன் திருப்பிய பிறகு பப் மீண்டும் திறக்கப்படும்” என்றார்.