போரிஸ் ஜான்சனுக்கு தற்கொலை மிரட்டல் அனுப்பிய இந்திய பெண்ணால் பரபரப்பு!

போரிஸ் ஜான்சன் (Image: Aaron Chown/PA via AP)

லண்டன்  / புதுடெல்லி, 28 ஆகஸ்ட் 2020: இந்திய பெண் ஒருவர் யுகே பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தற்கொலை செய்யப் போவதாக மின்னஞ்சல் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் வசிக்கும் 43 வயதான பெண் மணி ஒருவர் நேற்று இரவு 11 மணி அளவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “நான் மன அழுத்தத்தில் உள்ளேன். என்னைக் காக்க யாரும் வரப்போவது இல்லை. அடுத்த இரண்டு மணி நேரத்தில் நான் தற்கொலை செய்யப் போகிறேன்” என்று கூறியிருந்தார்.

அந்த மின்னஞ்சலில் அவரது போன் நம்பர், முகவரி இருந்தது. எனவே, பிரதமர் அலுவலகம் உடனடியாக அந்த மின்னஞ்சலை இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டது.

லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அந்த மின்னஞ்சலை டெல்லி போலீசுக்கு அனுப்பி, அது பற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் நேரடியாக இதை அனுப்பியுள்ளது என்று குறிப்பிட்டு கூறினர். டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த பெண் குறிப்பிட்ட முகவரிக்கு போலீசார் அனுப்பப்பட்டனர்.

இது குறித்து டெல்லி ரோஹினி பகுதி போலீஸ் இணை கமிஷனர் பி.கே.மிஸ்ரா கூறுகையில், “அதிகாலை 1 மணி அளவில் எனக்கு மின்னஞ்சல் வந்தது. அந்த பெண்ணை விரைவாக காப்பாற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டோம், ஆனால் அவர் எடுக்கவில்லை.

அந்த மின்னஞ்சலில் இருந்த முகவரி முழுமையாக இல்லை. எனவே, அந்த செல்போன் எண்ணை வைத்து அவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. டெல்லி ரோஹினி பகுதியில் 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று விசாரித்தோம். மூன்று மணி நேர பரபரப்பு தேடுதல் வேட்டைக்குப் பிறகு,  ஒரே ஒரு வீட்டின் உரிமையாளர் மட்டும் கதவைத் திறக்கவில்லை.

வீட்டுக்குள் இருந்து ஒரு பெண் இங்கிருந்து போங்கள் என்று கத்திக் கொண்டிருந்தார். உடனடியாக டெல்லி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கதவை உடைத்து உள்ளே சென்ற போது அந்த பெண் வீட்டின் வரவேற்பறையில் நின்று கொண்டிருந்தார். வீடு முழுக்க பூனைகள் இருந்தன. போலீசாரைப் பார்த்ததும் அந்த பெண் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருந்தார். உடனடியாக பெண் காவலர் அங்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து செல்ல ஆரம்பித்ததும் அவர் அழத் தொடங்கிவிட்டார். கணவரிடமிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றுள்ளார்.

டெல்லி மாநகராட்சியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலையைவிட்டுள்ளார். அவருக்கு மனநல ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலையில் சற்று தெளிவாக காணப்பட்ட அவரிடம் எதற்காக இப்படி செய்தீர்கள் என்று கேட்ட போது, வாடகை, கடன் பிரச்சினையைத் தீர்க்க உதவி கேட்பதற்காக மின்னஞ்சல் அனுப்ப நினைத்தேன். இப்படி ஆகிவிட்டது” என்று கூறியுள்ளார்.

அவர் இருந்த மனநிலைக்கு தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வழக்கமான போலி மின்னஞ்சல் என்று ஒதுக்கிவிடாமல் உடனடியாக செயல்பட்டு பெண்ணின் உயிரைக் காப்பாற்ற நினைத்த இங்கிலாந்து பிரதமருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk