இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்! – இளவரசர் சார்லஸ் பேச்சு

கொரோனா பாதிப்புக்குப் பிறகும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என்று இந்தியாவிடம் உலகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இளவரசர் சார்லஸ் பேசினார்.

இங்கிலாந்தில் இந்தியா குளோபல் வீக் என்ற மாநாடு நடக்கிறது. ஆன்லைனில் இந்திய பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பேசினார். நேற்று இங்கிலாந்து இளவசரர் சார்லஸ் பேசினார். அப்போது அவர், “தற்போதைய நெருக்கடியில் நாங்கள் மீண்டும் கட்டியெழுப்பும்போது, உலகளாவிய மதிப்பை உருவாக்க மக்களையும் உலகத்தையும் இதயத்தில் வைத்தால் நிலையான நிலையை நோக்கிச் செல்ல ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நீண்ட கால சந்தைகளை நோக்கிச் செல்லும்போது இயற்கை, சமூகம், மனிதன் மற்றும் உடல் மூலதனம் சமநிலையை உருவாக்கும். நான்கு வகையான மூலதனங்களிலும் முதலீடு செய்வது வாழ்க்கைத் தரத்தையும், நல்வாழ்வையும் எல்லா இடங்களிலும் அதிகரிக்க முடியும்” என்றார்.

மேலும் அவர் பேசும்போது நீடித்த நிலையான வாழ்க்கையின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார். அப்போது அவர்,” இந்தியா இந்த நிலையான நீடித்த வாழ்க்கையை உணர்ந்துள்ளது. இதன் தத்துவம் மற்றும் மதிப்பீடுகள் நிலையான வாழ்க்கை முறையையும் மனித குலத்துக்கும், இயற்கைக்கும் இடையேயான இணக்கமான உறவையும் வலியுறுத்துகின்றன. எடுத்துக்காட்டாக,’அபரிகிரஹா’ வின் யோகக் கொள்கை (உடைமை இல்லாதது, பற்றின்றி இருப்பது அல்லது பேராசை இல்லாதது) வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தேவையானதை மட்டுமே வைத்திருக்க ஊக்குவிக்கிறது.

பசுமையான மற்றும் சமமானதாக இருக்கும் உலகில் நமது பொருளாதார மாதிரிகளை மீண்டும் கட்டியெழுப்ப நாம் பார்க்கும்போது முற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம்” என்றார்.