முகக் கவசம் யார் அணியலாம், யார் அணிய வேண்டாம்? – வழிகாட்டுதல்கள் வெளியானது!

Face masks, shops

முகக் கவசம் அணியும் விதிமுறைகள் அமலுக்கு வர சில மணி நேரங்களே உள்ள நிலையில் இன்று மாஸ்க் அணிவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் நாளை (24ம் தேதி) முதல் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கு உள்ளே செல்லும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிய மறுப்பவர்களுக்கு 100 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்தின் உத்தரவில் குழப்பம் நிலவுகிறது, குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும்போது இந்த புதிய விதிமுறை எப்படி பொருந்தும் என்ற சந்தேகம் உள்ளது. உணவகங்களுக்கு செல்லும்போது உணவை வாங்கிவிட்டு செல்ல வேண்டும் என்று சொல்கிறார்களா என்று வர்த்தக நிறுவனங்கள், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை புதிய விதிமுறை அமலுக்கு வர இன்னும் கொஞ்சம் மணி நேரமே உள்ள நிலையில் அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், நீங்கள் உணவு அல்லது பாணம் வாங்கும் இடத்தில் அமர்ந்து சாப்பிடும் வசதி உள்ளது என்றால், நீங்கள் உணவை வாங்கி வந்து உங்கள் உணவு மேசைக்கு வந்த பிறகு மாஸ்கை அகற்றிவிட்டு சாப்பிடலாம்” என்றனர்.

அரசின் வழிகாட்டுதல் படி,

  • 11 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், உடல் நலக் குறைவு உள்ளவர்கள், சுவாசப் பிரச்னை, இதயப் பிரச்னை உள்ளவர்கள் என முகக் கவசம் அணிவதால் பிரச்னை வரலாம் என்ற நிலையில் உள்ளவர்கள் முகக் கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • உணவு விடுதிகள், பப்களில் முகக் கவசம் கட்டாயம் இல்லை.
  • ஹேர்டிரஸ்ஸர் மற்றும் இதர சலூன்களுக்குள் முகக் கவசம் அணிய வேண்டாம்.
  • ஜிம் மற்றும் ஓய்வு விடுதிகளில் அணிய வேண்டாம்.
  • சினிமா, நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், தியேட்டர்களில் மாஸ்க் அணிய வேண்டாம்.

எங்கு எல்லாம் கட்டாயம்?

  • சூப்பர் மார்க்கெட்
  • கடைகள்
  • வங்கிகள்
  • சான்ட்விச் ஷாப்
  • டேக்அவே

ஸ்காட்லாந்தில் கடந்த 10ம் தேதியில் இருந்தே முகக் கவசம் அணிவது கட்டாயம் என்ற நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

முகக் கவசம் அணிவது தொடர்பாக போலீசார் கூறுகையில், “நாள் முழுக்க கடைகளுக்குள் மக்கள் முகக் கவசம் அணிந்திருக்கிறார்களா என்று மட்டும் ரோந்து சுற்றிக் கொண்டிருக்க முடியாது. முகக் கவசம் அணியாதவர்களை கடை நிர்வாகிகளே தடுத்து நிறுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். இதற்கு எல்லாம் போலீஸ் வந்து சொல்ல முடியாது. அதுவே பிரச்னை எல்லை மீறுகிறது என்றால் போலீசை அழைக்கலாம் என்றனர்.

நேற்று தனியார் வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்த மெட் கமிஷனர், கடைசி முயற்சியாக மட்டுமே போலீசை அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk