இங்கிலாந்தை விட்டு வெளியேற முடியாமல் கென்டில் நிறுத்தி வைக்கப்பட்ட 1500 லாரிகள்

லாரிகள்
(Image: BBC)

பிரான்ஸ் தன்னுடைய எல்லையை மூடியுள்ளதால் பாதை விரைவில் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் கென்ட் பகுதியில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் புதிய வீரிய கொரோனா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட நாடுகள் இங்கிலாந்துடனான போக்குவரத்தை துண்டித்துள்ளன. அண்டை நாடான பிரான்ஸ் தன்னுடையை எல்லையை மூடிவிட்டது.

இதனால், இங்கிலாந்துக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரிகள் மீண்டும் நாட்டைவிட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் உணவுப் பொருள் பற்றாக்குறை வரலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இந்த சூழலில், பிரான்ஸ் தன்னுடைய எல்லையை திறக்கும் என்ற நம்பிக்கையில் கென்ட் பகுதியில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வீரியம் மிக்க புதிய வைரஸ் காரணமாக கிட்டத்தட்ட ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுமே இங்கிலாந்துடனான போக்குவரத்தை ரத்து செய்துவிட்டன. தடை நீக்கம் தொடர்பாக இங்கிலாந்து வலியுறுத்தி வரும் சூழலில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைத்துப் பதிலளிப்பது தொடர்பாக பேசி வருகின்றன.

இந்த நிலையில் போக்குவரத்து தடை தொடர்பாக பிரான்சுடன் பேச்சு வார்த்தை நடத்தி சரி செய்யப்படும் என்று உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முன்னேற்றங்கள், அப்டேட்களை இன்றைய நாள் முடிவதற்கு முன்பு கேட்பீர்கள் என்று அவர் பிபிசி-க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டுடனான தனது எல்லையை பிரான்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூடியது. 48 மணி நேரத்துக்கு இந்த தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 48 மணி நேரம் முடிய உள்ள சூழலில் அது என்ன மாதிரியான முடிவெடுக்கப் போகிறது என்ற கவலை இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோனுடன் பேசி வருகிறார். இருவரும் எடுக்கும் முடிவு அடிப்படையில் அடுத்த கட்ட திட்டம் இருக்கும் என்று பிரான்ஸ் அமைச்சர் கிளமெண்ட் கூறியுள்ளார். இந்த புதிய முடிவு புதன் கிழமை அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பழையபடி சரக்கு லாரிகள் போக்குவரத்து தொடங்கும் என்று வணிக நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter