தாமதமான மருத்துவ சிகிச்சை, பொருளாதார பாதிப்பு காரணமாக 2 லட்சம் பேர் உயிரிழக்கலாம்! – எச்சரிக்கும் ஆய்வுகள்

கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக சரியான நேரத்துக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்காமை, பொருளாதார பாதிப்பு காரணமாக ஐக்கிய ராஜ்ஜியத்தில் இரண்டு லட்சம் பேர் வரை உயிரிழக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்படி இருந்தும் 45 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். உலக அளவில் கொரோனா மரணத்தில் இங்கிலாந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் வரும் ஆண்டில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் காரணமாக சரியான சிகிச்சை சரியான நேரத்துக்கு கிடைக்காமை காரணமாக 2 லட்சம் பேரும், பொருளாதார பாதிப்பு காரணமா 12 ஆயிரம் பேர் வரையிலும் உயிரிழக்க நேரிடலாம் என்று அரசு ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.

அரசின் சுகாதாரத் துறை, சமூக நலத் துறை, தேசிய புள்ளியியல் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

கொரோனா காரணமாக மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன. இதனால் இதய நோய்கள், புற்று நோய், பக்கவாதம் உள்ளிட்ட உயிரைப் பறிக்கும் பல்வேறு நோய்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அறுவைசிகிச்சை உள்ளிட்டவை ஒத்திப் போடப்பட்டுள்ளன. சிறுநீரக, சர்க்கரை நோய் சிகிச்சைகளில் கூட தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மற்ற நோய்கள் காரணமாக உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபேர்டு பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் மார்ச் முதல் மே வரையிலான மாதங்களில் மருத்துவமனைக்கு வரும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை 5000 அளவுக்கு குறைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மற்ற நோயாளிகள் சரியாக கவனிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அவசரம் இல்லாத நோயாளிகள் என்று கூறி பல்வேறு சிகிச்சைகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிலர் முன்கூட்டியே இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் நோய் கண்டறிதல், தடுத்தல், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பலரும் நோயை கண்டறியாமல், நோயோடு வாழ்கின்றனர். இதன் மூலம் தவிர்த்திருக்க வேண்டிய மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கின்றனர்.

இது தவிர பொருளாதார பாதிப்பு காரணமாக மேலும் 12 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. முதல் கொரோனா பாதிப்பு காலத்தில் 500க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டதாகவும் 20க்கும் மேற்பட்டோர் உள்ளூர் வன்முறை காரணமாகவும் கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றை சரி செய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk