லண்டனில் துப்பாக்கிச் சூடு… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர்!

(Image:news.met.police.uk)

தெற்கு லண்டனில் இன்று அதிகாலை இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

லண்டன் பிரிட்ஜ் அவுஸ் புல்வெளிப் பகுதியில் அனுமதியற்ற இசை நிகழ்ச்சி நேற்று இரவு முதல் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமை காலை 4.05 மணி அளவில் மெட் போலீசாருக்கு நியூ கிராஸ் ரோலின்ஸ் தெருவில் இருந்து அழைப்பு வந்தது. அங்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது என்று கூறப்படவே போலீசார் விரைந்து அங்கு வந்தனர். அங்கு மார்பு மற்றும் உடலில் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் 27 வயது இளைஞர் சரிந்து கிடப்பதை கண்டனர்.

உடனடியாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை அழைக்கப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அவருக்கு அங்கே முதலுதவி அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நிலை மோசமாக உள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் முடிந்து 4.30 மணி அளவில் இரண்டாவது நபர் கையில் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்தார். கையில் காயம் என்பதால் உயிருக்கு ஆபத்து இல்லை. இருப்பினும் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் மெட் ஸ்பெஷாலிட்டி கிரைம் கமாண்டின் துப்பறியும் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து டிடக்டிவ் கான்ஸ்டபிள் சைமன் கார்சன் கூறுகையில், “துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அருகில் பிரிட்ஜ்அவுஸ் பகுதியில் அனுமதி இல்லாத இசை நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில், ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

எனவே, இந்த சம்பவம் தொடர்பாக யாருக்காவது ஏதாவது தெரிந்தால் மெட் போலீசாருக்கு தெரிவிக்கலாம். விசாரணை ஆரம்பநிலையில் உள்ளதால் எதனால் துப்பாக்கிச் சூடு நடந்தது என்று தெரியவில்லை. இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk