நோர்ஃபோக்: பிரபல கோழி இறைச்சி நிறுவனத்தில் 75 பேருக்கு கொரோனா!

(Image: Rex / metro.co.uk)

நோர்ஃபோக்கில் இயங்கிவரும் பிரபல கோழி இறைச்சி நிறுவனத்தில் வேலை செய்து வருபவர்களில் 75 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நோர்ஃபோக் அட்ல்பரோவில் பான்ஹாம் கோழிப்பண்ணை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்து வந்த ஏழு பேருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 347 பேருக்கு சோதனை மேற்கொண்டதில் கோழியைப் பதப்படுத்தும் பணியை செய்து வரும் 75 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பான்ஹாம் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர்களில் 75 பேருக்கு கொரோனா உறுதியான செய்தி அப்பதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறுவனத்தின் செயல்பாடும் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொது சுகாதார இயக்குநர் டாக்டர் லூயிஸ் ஸ்மித் கூறுகையில், “நாட்டின் மிக முக்கிய குறிப்பிடத்தக்க கொரோனா அவுட்பிரேக்காக இது பார்க்கப்படுகிறது. கோழி இறைச்சியை வெட்டும் பகுதியைச் சேர்ந்த ஊழியர்கள், தங்கள் குடும்பத்தினருடன் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையும், பணியாளர்கள் வசிக்கும் பகுதியும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு ஆய்வு நடத்திய பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கவுன்சில் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பான்ஹாம் கோழிப்பண்ணை நிறுவனம் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. அவர்களாக முன்வந்து தொழிற்சாலையின் சில பகுதிகளின் இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளனர்” என்றார்.

பான்ஹாம் கோழிப்பண்ணை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிளைன் வான் ரென்ஸ்பர்க் கூறுகையில், “எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு எங்களின் முதலிடத்தில் உள்ளது. ஊழியர்களுக்கு பிபிஇ (பாதுகாப்பு கவசம்) வழங்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் சரியாக அணிந்திருக்கிறார்களா, சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்பது பற்றிக் கண்காணிக்கப்படும். மிகப்பெரிய தொழிற்சாலையில் 1100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட பகுதியில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே கொரோனாத் தொற்று உறுதியாகி உள்ளது. அந்த பகுதி மட்டும் மூடப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியில் பாதிப்பு இல்லை” என்றார்.

பான்ஹாம் கோழி இறைச்சி இங்கிலாந்தின் முன்னணி இறைச்சி நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு என்பது நாட்டின் மொத்த கோழி இறைச்சி பயன்பாட்டில் ஏழு சதவிகிதமாக உள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk