டிசம்பர் 2ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு இல்லை… போரிஸ் ஜான்சன் அளித்த வாக்குறுதி!

PM, promises, lockdown, ஊரடங்கு, கட்டுப்பாடு, கொரோனா
(Image: EPA)

டிசம்பர் 2ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு இருக்காது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் வாக்குறுதி அளித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. ஊரடங்குக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்பும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில் மிகவும் காலம் தாழ்த்தி ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தொழிலாளர் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. ஆளும் கட்சித் தரப்பில் இருந்தோ வேறு மாதிரியான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஊரடங்கு டிசம்பர் 2ம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்படலாம் என்று அமைச்சர் கூறியிருந்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் இந்த ஊரடங்கு நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்துவிடும் என்று கூறினர்.

இதற்கு பதில் அளித்த பிரதமர், வேறு வழியின்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது போன்று முழுமையான, அதிக கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்காக இது இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, “தற்போது ஊரடங்கு அறிவிக்காமல் இருந்தால், கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் ஆயிரங்களில் நிகழ்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது பிரிட்டனுக்கு ஒரு வெளிச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் யாரும் அரசியலுக்கு வரவில்லை. சுதந்திரத்தை அடக்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை.

நமது பொருளாதாரத்தை சேதப்படுத்தவும், வணிகர்களின் வாழக்கையைப் பறிக்கவும் நாங்கள் விரும்பவில்லை.

ஆனால் கொரோனா பரவல் அச்சம் அதிகரிப்பு காரணமாக டிசம்பர் 2ம் தேதி வரை ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கடுமையான நடவடிக்கைகள் டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவடையும் என்று உறுதியளிக்கிறேன்.

மிகப் பெரிய அளவில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது நாட்டின் கொரோனா பரவல் வேகத்தைக் குறைத்து, கொரோனா வைரஸ் கிருமியை வீழ்த்தும் என்று நம்புகிறேன்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter