பிரைட்டன் மருத்துவமனையில் ஒருவருக்கு கத்திக்குத்து! – போலீசார் குவிப்பு

(Image: Gareth Fuller/PA Wire)

பிரைட்டன் ராயல் ஸசெக்ஸ் கவுண்ட்டி மருத்துவமனையில் 56 வயது மதிக்கத்தக்க நபர் மீது கத்திக் குத்து சம்பவம் நிகழ்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் ஏராளமான துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 8.40 மணி அளவில் பிரைட்டன் மருத்துவமனையில் 56 வயது மதிக்கத் தக்க நபர் மீது கத்தி குத்து சம்பவம் நடந்தது. அதில் அந்த நபர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்ததும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மருத்துவமனையில் குவிக்கப்பட்டனர். இது ஏதும் பயங்கரவாத சம்பவமாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து காலை 9.40 மணி அளவில் வில்சன் அவென்யூ பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கைது செய்தனர்.

(Image: Gareth Fuller/PA Wire)

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “ராயல் ஸசெக்ஸ் கவுண்ட்டி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மனை ஊழியர் மீது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது. தற்போது அவர் நலமாக உள்ளார். அவரது உடல்நிலை இயல்பாக உள்ளது. தற்போதும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் தற்போது மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொது மக்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸசெக்ஸ் போலீஸ் இது குறித்து கூறுகையில், “எதிர்பாராத விதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் இதைப் பயங்கரவாத தாக்குதலாக கருத முடியாது. சம்பவம் நடந்ததும் மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்கள் விரைந்து வந்துள்ளனர். மருத்துவ பணியாளர்களுக்கோ, நோயாளிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போதைய நிலையில் எதனால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூற முடியாது” என்று கூறியுள்ளது.

இந்த சம்பவம் மருத்துவமனையின் ஏழாவது தளத்தில் நடந்தது என்று கூறப்படுகிறது. தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையின் துப்புரவு ஊழியர் என்றும், அவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவுக்கு கத்திக்குத்து தாக்குதல் நடைபெறவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதும் அதுவும் மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே தாக்குதல் நடந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk