கொரோனாவுக்கு மத்தியில் திறக்கப்பட்ட கேசினோ கேளிக்கைகள்!

(Image: newsontheflipside.com)

இங்கிலாந்தில் கொரோனா பரவல் பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று கேசினோ, ஸ்னோ பால், குழந்தைகள் விளையாட்டு உள்ளிட்டவை திறக்கப்பட்டது பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஜூலை மாதம் தொடக்கத்தில் பப் உள்ளிட்டவை திறக்கப்பட்டன. அந்த மாத இறுதியிலேயே கேசினோ, சாஃப்ட் பிளே, உள் அரங்க நிகழ்வுகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் அரசு நினைத்ததற்கு எதிர்மாறாக கொரோனா பரவல் அதிகரிக்கவே புதிய தளர்வுகளை வழங்கும் முடிவை அரசு ஒத்திவைத்தது. ஒருவழியாக இன்று முதல் கேசினோ, சாஃப்ட் பிளே, பியூட்டி ட்ரீட்மெண்ட், சிறு திருமண வரவேற்பு, உள் அரங்க நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவை திறக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

பிரான்சில் கொரோனா பாதிப்பு காரணமாக இங்கிலாந்து திரும்புவோருக்கு சுய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கேசினோக்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியது. முதல் நாளே ஏராளமானோர் திரண்டு வந்து தங்கள் மகிழ்ச்சி, ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஹாலிவுட் பவுலின் தலைமை நிர்வாகி ஸ்டீபன் பர்ன்ஸ் இது குறித்து கூறுகையில், “இன்று 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் வளாகம் திறக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பந்து வீச்சு பாதைகளுக்கு இடையில் திரும்பும் பந்துகளை பகிர்ந்துகொள்ள அனுமதிப்பதில்லை. ஹேண்ட் சானிடைசர்கள், கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஊழியர்கள் முகமூடி அணிந்துள்ளனர். அவர்களை பாதுகாப்பு உறை அணிந்து பாதுகாத்துக் கொள்கின்றனர். வாடிக்கையாளர்கள் உணவு, பானங்கள் குடிக்கும் போது தவிர்த்து மற்ற நேரங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக கண்காணிக்கப்படுகிறது” என்றார்.

மக்கள் இயல்புநிலை மற்றும் பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்ப தளர்வுகள் வழங்கப்படுகின்றன. வைரஸ் தொற்று பரவல் அதிகரித்தால் அதைக் கட்டுப்படுத்த பழைய படி தளர்வுகள் ரத்து அறிவிக்கவும் தயங்க மாட்டேன் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா பரவலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook: https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter: https://twitter.com/tamilmicsetuk