ஐந்து நாள் கொரோனா கட்டுப்பாடு தளர்வு மிகப்பெரிய தவறு! – நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனா,
(Image: PA Media)

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஐந்து நாள் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு வழங்கியிருப்பது என்பது மிகப்பெரிய தவறு என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மக்கள் மத்தியில் சேர்வையும் எரிச்சலையும் ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, முழு ஊரடங்கு என்று அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டே இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் லண்டன் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

லண்டனில் மூன்றாம் நிலை கட்டுப்பாடு கொண்டுவருவது ஒன்றே கொரோனா பரவலைத் தடுக்க உதவும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் லண்டனில் வசித்து வருகின்றனர். அவர்கள் கிறிஸ்துமஸ் தருணத்தில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள்.

இவர்கள் சொந்த ஊருக்கு வருவது லண்டனில் உச்சத்தை அடைந்து வரும் கொரோனா தொற்று மீண்டும் நாடு முழுவதும் பரவ வழிவகுத்துவிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் சமயத்தில் ஐந்து நாள் தளர்வு வழங்கப்பட்டிருப்பதற்கும் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

எடின்பர்க் பல்கலைக் கழக பொது சுகாதாரத் துறை பேராசிரியர் லிண்டா பால்ட் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் கூறுகையில், “தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திக்க கொரோனா தொற்று உச்சத்தில் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொற்று பரவல் மிகக் குறைவாக உள்ள இடத்துக்கு வர உள்ளனர். இது கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

கொரோனா தொற்று அதிகம் உள்ள நேரத்தில் இது சரியான நடவடிக்கையாக இல்லை. பொது மக்களும் தங்களின் அன்புக்குரியவர்களைச் சந்திக்க செல்வது சரிதானா என்பதை எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும்.

இந்த தருணத்தில் அரசு கிறிஸ்துமஸ் விதிமுறை தளர்வைத் திரும்பப் பெற்றால் அது அரசு மீதான நம்பிக்கையைப் பாதிக்கலாம். அதனால் வேறு எந்த பலனும் வந்துவிடாது” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter