லண்டன் மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும்! – நிபுணர்கள் எச்சரிக்கை

London, enter, tier 3, மூன்றாம் நிலை, நிலை, கொரோனா
(Image: Twitter)

லண்டனில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதால் மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் லண்டன் வர வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

கொரோனா முழு ஊரடங்கு கட்டுப்பாடு முடிவுக்கு வந்த பிறகு லண்டனில் இரண்டாம் நிலை ஊரடங்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.

ஆனால், கொரோனாத் தொற்று பரவல் குறையாத நிலையில் லண்டனில் மூன்றாம் நிலை ஏன் அமல்படுத்தப்படவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டிசம்பர் 16ம் தேதி மூன்றடுக்கு கட்டுப்பாடு தொடர்பான முதல் மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போதாவது லண்டனில் மூன்றாம் நிலை அமல்படுத்தப்பட வேண்டும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வட மேற்கு இங்கிலாந்தின் முன்னாள் மண்டல பொது சுகாதார இயக்குநர் பேராசிரியர் ஜான் அஸ்தன் கூறுகையில், “கிறிஸ்துமஸ் சமயத்தில் லண்டன் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பிவழியாமல் இருக்கக் கட்டாயம் மூன்றாம் நிலை ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்.

தற்போது அரசு எதையும் செய்யவில்லை என்றால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தருணத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடி வாழும் இடமாக லண்டன் உள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளைக் கையாளுவதற்கும் லண்டனைக் கையாளுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

லண்டனில் கொரோனாத் தொற்று அதிகரிப்பது நாட்டின் மற்ற பகுதிகளில் தொற்று பரவலுக்கு வழிவகுத்துவிடும். இதன் மூலம் இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டமே இங்கிலாந்தில் மூன்றாம் கொரோனா பரவல் அலைக்குக் காரணம் ஆகிவிடும்” என்றார்.

சந்திப்பை தவிர்க்கவும்…

தென் கிழக்கு இங்கிலாந்து பகுதிக்கான மண்டல பொது சுகாதார முன்னாள் இயக்குநர் மைக் கில் கூறுகையில், “தற்போது அதிகரித்து வரும் தொற்று ஒரு புறம் இருந்தாலும் கிறிஸ்துமஸ் சமயத்தில் ஏற்படும் அபாயங்கள் மிகப் பெரியவை.

மக்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதைப் பெருமளவு குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய அளவில் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிவதைக் காண வேண்டியிருக்கும்” என்றார்.

லண்டன் மேயர் சாதிக் கான் கூறுகையில், கிறிஸ்துமஸ் சமயத்தில் வழங்கப்பட்டுள்ள கட்டுப்பாடு தளர்வுக்கு முன்பு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது பற்றி விவாதிக்க வேண்டி உள்ளது.

லண்டனில் உள்ள அரசியல் தலைவர்கள் மத்தியில் லண்டனில் உயர் நிலை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. எனவே, உயர் நிலைக்கு செல்வதைத் தவிர்க்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

இதைப் படிச்சீங்களா: ஆக்ஸ்ஃபோர்டின் கொரோனா தடுப்பூசி மிகவும் ஆற்றல் மிக்கது! – ஆய்வில் தகவல்

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter