2022க்கு முன்பு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவோம்! – ஹென்காக் நம்பிக்கை

கொரோனா, ஹென்காக்
(Image: PA Media)

2022ம் ஆண்டுக்கு முன்பு பழைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடலாம் என்று சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. அப்போது முழு ஊரடங்கு, கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

பின்னர் செப்டம்பரில் மீண்டும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிக்கவே கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. அப்போது, கிறிஸ்துமஸ் சமயத்தில் மகிழ்ச்சியாக இருக்க கட்டுப்பாடுகள் அவசியம் என்று கூறப்பட்டது.

கிறிஸ்துமஸ் நெருக்கத்தில் ஈஸ்டர் சமயத்தில் பாதிப்பு குறைந்திருக்கும் என்று கூறப்பட்டது. தற்போது 2022ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் கூறியுள்ளார்.

நாட்டின் மேலும் பல பகுதிகள் 4ம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் வருவதாக இன்று மெட் ஹென்காக் அறிவித்தார். அதைத் தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது நிருபர் ஒருவர், “புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் அரசு இதுவரை ஈஸ்டர் நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறிவந்தது தவறானது ஆகிவிடாதா?” என்று கேட்டார்.

அதற்கு ஹென்காக், “தற்போதைய சூழலில் 2022ம் ஆண்டுக்கு முன்பு நாம் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவோம் என்று மிக ஆழமாக நம்புகிறேன். இதற்கு ஏற்றார்போல தடுப்பூசி போடப்படுவது விரைவுபடுத்தப்படும்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இங்கிலாந்தில் புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது போல, தென் ஆப்பிரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்க வகை வைரஸ் கிருமி தொற்று இங்கிலாந்தைச் சேர்ந்த இருவருக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் மிகச் சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சென்று வந்துள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது குவாரன்டைன் செய்யப்பட்டுள்ளனர்.

தென் ஆப்ரிக்காவுக்கு சென்றுவந்தவர்களுக்கு மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் ஆஸ்ட்ரா ஜெனிக்கா வாக்சின் முழு புள்ளிவிவரங்கள், தகவலுடன் எம்.ஹெச்.ஆர்.ஏ அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளது. மருந்துக்கு அனுமதி வழங்கும் ஒழுங்குமுறை அமைப்புக்கு நெருக்கடிகள் கொடுக்க விரும்பவில்லை.

தடுப்பூசி போடும் பணி மிகப்பெரிய சவாலான ஒன்று. இருப்பினும் நாட்டின் ஒவ்வொருவருக்கும் மிக விரைவில் தடுப்பூசி வழங்கப்படும்” என்றார் ஹென்காக்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter