புதிய வகை கொரோனா வைரஸ் பரவல்… இத்தாலி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் விமான சேவையை நிறுத்தின!

கொரோனா, விமான, போக்குவரத்து

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்து சேவையை இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் தடை செய்துள்ளன.

இங்கிலாந்தில் பரவலாக புதிய வகை வீரியம் மிக்க கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதனால், இங்கிலாந்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ் ஐந்து நாள் ஊரடங்கு தளர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துமசுக்கு அடுத்த நாளிலிருந்து வடக்கு அயர்லாந்தில் முழு ஊரடங்கு ஆறு வாரங்களுக்கு அமல்படுத்தப்படுகிறது.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய கட்டுப்பாடு சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று ஹென்காக் கூறியுள்ள சூழலில், பல ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான விமான சேவையை துண்டித்துக்கொண்டுள்ளன.

நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. பிரிட்டனுடனான ரயில் போக்குவரத்தையும் பெல்ஜியம் ரத்து செய்துள்ளது.

சனிக்கிழமை இங்கிலாந்து அரசு புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்ட நிலையில், நெதர்லாந்து வெளியிட்ட அறிக்கையில் ஜனவரி 1, 2021 வரையில் இங்கிலாந்துடனான விமான சேவை ரத்து செய்யப்படுகிறது.

இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் பரவி வரும் சூழலில், அரசின் இந்த நடவடிக்கை நெதர்லாந்தில் புதிய வகை வைரஸ் பரவுதல் வாய்ப்பை குறைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி வெளியுறவுத் துறை அமைச்சர் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை நிறுத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதே போல் பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளும் இங்கிலாந்துடனான போக்குவரத்தை தடை செய்ய திட்டமிட்டு வருகின்றன.

அயர்லாந்து, ஆஸ்திரியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் கூட விமான சேவையை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பான தகவலும் வெளியாகி உள்ளது.

இந்த கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் இல்லை. இருப்பினும் முந்தியதைக் காட்டிலும் 70 சதவிகிதத்துக்கும் அதிகமாக மற்றவர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு கொண்டதாக இது உள்ளது..

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter