லிவர்பூலில் மிகப்பெரிய அளவிலான கொரோனா பரிசோதனை… வரிசை கட்டிய மக்கள்!

covid testing begins, கொரோனா, பரிசோதனை
(Image: Jennifer Bruce / Liverpool City Council)

லிவர்பூல் நகரத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் சோதனை முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில் பரிசோதனைக்காக ஏராளமானவர்கள் வரிசையில் நின்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் கொரோனா பரவலைத் தடுக்க நான்கு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு, கல்வி, வேலை என குறிப்பிட்ட விஷயங்களுக்காக மட்டுமே மக்கள் வெளியே செல்லலாம் என்று விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு வாரத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றி கொரோனவைக் கட்டுப்படுத்த அரசு திட்டம் தீட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் கொரோனா பரிசோதனை திட்டம் சோதனை ரீதியில் லிவல்பூலில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் அளவுக்கதிகமாக மக்கள் கொரோனா சிகிச்சைக்கு குவிவதைத் தடுக்கும் வகையிலும், மக்களின் உயிரைக் காப்பாற்றும் வகையிலும், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு விரைவில் முடிவு கட்டவும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நகர மேயர் ஜோ ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்த பரிசோதனை முயற்சியானது இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையின் போது தற்போது நடைமுறையில் உள்ள தொண்டை அல்லது வாய் பகுதியிலிருந்து மாதிரியை எடுத்து பரிசோதனைக்கும் முறையும், மிக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நவீன பரிசோதனை முறையிலும் சோதிக்கப்படுகின்றனர்.

இதன் மூலம் மாதிரியை ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பத் தேவையில்லை. 20 நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும்.

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், அலுவலகங்கள், கேர் ஹோம் என அனைத்து இடங்களிலும் இதற்கான பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு லிவர்பூல் கண்காட்சி மையத்தில் ஆறு பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்காக மேலும் அதிக அளவில் மையங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அறிகுறிகள் இருந்தால் அவர்கள் நகரத்தின் பல பகுதிகளிலும் உலா வரும் நடமாடும் பரிசோதனை மையத்தை அணுகி பரிசோதனை செய்துகொள்ளலாம்.

கொரோனா பரிசோதனை விரைவாக முடிக்க லிவர்பூல் நகரத்தில் 2000ம் ராணுவ வீரர்கள் பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பரிசோதனை செய்துகொள்ள பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதுவும் கொரோனா பரவலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்று பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter