லண்டனில் பலத்காரம், கொலை செய்துவிட்டு இந்தியா தப்பிய கொடூரன்… குற்றவாளி என அறிவிப்பு

வேட்டையாடு விளையாடு படம் போல, லண்டனில் பெண்களை தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்த, பெண் ஒருவரை கொலை செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிய அமான் வியாஸ் என்ற நபர் லண்டன் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை பல பெண்களைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த நபர் பற்றி போலீசில் புகார் வந்து கொண்டே இருந்தது. கடைசியில் இளம் பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்டார்.

அமான் வியாஸ் என்ற நபர் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி முதன் முறையாக பாலியல் வன்கொடுமையை செய்ய ஆரம்பித்தான். லண்டனில் 59 வயதான பெண்மணி ஒருவர் வெளியே சென்றுவிட்டு தன்னுடைய வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தார். அவரை அமான் வியாஸ் பின்தொடர்ந்து வந்துள்ளார். வீட்டுக்கு அருகே அந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்துள்ளான் வியாஸ். இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனர். அதன்பிறகு அந்த பெண் வீட்டுக்குச் சென்ற போது பின்னால் மறைந்திருந்து அத்துமீறி உள்ளே நுழைந்தான். அந்த பெண் வெளியேறும்படி கூச்சலிடவே  அந்த பெண்ணின் முகத்தில் பயங்கரமாக தாக்கினான். அதன் பிறகு அந்த பெண்மணியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, மன்னித்துவிடும்படி கூறிவிட்டு தப்பினான்.

குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள அமான் வியாஸ் (Image: news.met.police.uk).

அதே போல் ஏப்ரல் 22. 2009ல் 46 வயதான பெண்மணியை தாக்கி அவருடன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். கத்தியை காட்டி மிரட்டி தாக்கியதால் அந்த பெண் அவனுடைய முழு செயலுக்கும் ஒத்துழைப்பு அளித்ததாக அவன் தெரிவித்துள்ளான்.

மூன்றாவதாக 2009 ஏப்ரல் 29ம் தேதி 32 வயதான பெண் ஒருவர் சூப்பர் மார்க்கெட் செல்லும்போது அவரை பின்தொடர்ந்து தாக்கி தன்னுடைய சேட்டையை செய்துள்ளான்.

கடைசியாக 2009 மே 30ம் தேதி மைக்கேல் சமரவீரா என்ற 35 வயது பெண்ணை அவன் தாக்கினான். மார்க்அவுஸ் சாலையில் உள்ள கடையில் அதிகாலை 1.30 மணி அளவில் உணவுப் பொருட்களை வாங்கி வந்த போது அவரை வியாஸ் பின் தொடர்ந்துள்ளான். இதை சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

அந்த பெண் குவின்ஸ் ரோடு பகுதியில் நடந்து வந்த போது அங்குள்ள சிறிய பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் அருகே அவரை தடுத்து நிறுத்தியுள்ளான். அவரை தாக்கி, தன்னுடைய பாலியல் தேவைக்கு பயன்படுத்தினான். பெண்ணின் கதறல் சத்தம் பெரிய அளவில் கேட்கவில்லை. இதனால் யாரும் போலிசில் புகார் செய்யவில்லை.

பெண்ணை பின்தொடர்ந்து சூப்பர் மார்க்கெட் உள்ளே நுழைந்த அமான் (Image: news.met.police.uk).

காலை 5.15 மணி அளவில் நாயுடன் நடைப்பயிற்சி சென்றவர் மிகவும் அலங்கோலமான நிலையில் சமரவீரா இருப்பதைக் கண்டு போலீசில் புகார் செய்துள்ளார். போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் அங்கு விரைந்து வந்தது. ஆனால், அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

தாக்கப்பட்ட அனைவரிடமிருந்தும் பெறப்பட்ட டி.என்.ஏ சாம்பிள்கள் ஒத்துப்போனது. குற்றவாளி யார் என்று தெரியாமல் போலீசார் திணறினர். தேடப்படும் குற்றவாளி ஆசியாவைச் சேர்ந்தவர், வயது 30 முதல் 40 இருக்கலாம், நிறம் சற்று கருப்பாக இருக்கும் என்பதைத் தவிர வேறு எந்த அடையாளமும் கிடைக்கவில்லை. கடைசியில் ஜூன் 6, 2009ம் தேதி வீடு வீடாக சென்று விசாரணை நடத்தினர். ஆசியாவைச் சேர்ந்த மேலே சொன்ன அடையாளங்களுடன் இருந்தவர்களின் உடலில் இருந்து சாம்பிள் எடுக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆண்டு இறுதிக்குள் 1100 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது.

தொடர் தேடுதல், விசாரணை, குற்றவாளி பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை எதுவுமே பலன் தரவில்லை.

குற்றவாளியின் சிசிடிவி கேமரா காட்சி அடிப்படையில் புகைப்படம் வெளியிடப்பட்டது. அப்போது ஒருவர் புகைப்படத்தில் உள்ளது போன்ற நபர் தன்னிடம் பணியாற்றியதாகவும் தற்போது அவர் இங்கு இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால், அவரது குடும்பத்தினர் இன்னமும் இங்குதான் வேலை செய்கின்றனர் என்றார். அவருடைய உதவியுடன் வியாசின் குடும்பத்தினரிடமிருந்து டி.என்.ஏ சாம்பிள் எடுக்கப்பட்டது. அதில் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ-வும் அதுவும் ஒத்துப்போனது.

சூப்பர் மார்க்கெட் உள்ளே பெண்ணை நோட்டமிடும் அமான் (Image: news.met.police.uk).

அதன்பிறகு விசாரித்தபோது கடைசியாக கொலை செய்யப்பட்ட சமரவீரா மரணத்துக்கு அடுத்த நாளே அமான் வியாஸ் இந்தியாவுக்கு தப்பியது தெரிந்தது. அவன் எங்கிருக்கிறான் என்று தேடி அவனை இங்கிலாந்துக்கு கொண்டுவர கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆனது. 2019ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி அவன் லண்டனுக்கு அனுப்பப்பட்டான். லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் போலீசார் அவனை கைது செய்தனர்.

கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு ஓல்டு பெய்லி க்ரேய்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்தது. அங்கு அவன் குற்றவாளி என்று உறுதி இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவனுக்கான தண்டனை வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், வன்முறைக்கு ஆளானவர்கள் ஓரளவுக்கு நிம்மதி அடைந்துள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk