சாண்ட்வெல்: 5 ஊழியர்களுக்கு கொரோனா… மூடப்பட்ட மெக்டோனல்ஸ்! லாக்டவுன் வருமா?

சாண்ட்வெல்லில் உள்ள மெக்டோனல்ஸ் உணவகம். (Image: Gogle Map)

மெக்டோனல் உணவகத்தில் பணியாற்றிய ஊழியர்களக்கு கொரோனாத் தொற்று உறுதியானது. இதனால், அந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து தொற்று அதிகரித்தால் லாக் டவுன் கொண்டு வரப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சாண்ட்வெல் கிரேட் பிரிட்ஜ் பகுதியில் செயல்பட்டு வந்த மெக்டோனல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் இந்த உணவகத்துக்கு வந்து சென்றவர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

சாண்ட்வெல்லில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒரு லட்சம் பேருக்கு 30.9 பேருக்கு கொரோனா என்ற அளவுக்கு பாதிப்பு உள்ளது. இது கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் 10 மடங்கு அதிகம். கடந்த வாரத்தில் மட்டும் இங்கு 90 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் உள்ளூர் நிர்வாகம் இறங்கியுள்ளது.

இது குறித்து சாண்ட்வெல் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் லிஷா மெக்னலி கூறுகையில், “அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் கொரோனாத் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருந்தால், உள்ளூர் லாக்டவுன் தேவைப்படும். கொரோனா எண்ணிக்கையைப் பொருத்து அது முடிவு செய்யப்படும். இந்த பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம், ஆனால் உச்சத்துக்கு செல்ல வாய்ப்பில்லை. இருப்பினும் இது மிகவும் ஆபத்தான நிலைதான்” என்றார்.

இது குறித்து கிரேட் பிரிட்ஜ் மெக்டோனல் தரப்பில் பேசியவர்,  இந்த பகுதியில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் எங்கள் ஊழியர்கள் ஐந்து பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கள் உணவகம் தற்காலிகமாக மூடப்படுகிறது. வாடிக்கையாளர் நலனே முக்கியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் நலமடைந்த பிறகு விரைவில் உணவகம் திறக்கப்படும்” என்றார்.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. நேற்று 763 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 3,11,151ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 45,961 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk