கிறிஸ்துமசுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி! – நம்பிக்கை வார்க்கும் தடுப்பூசி பணிக்குழு தலைவர்

கொரோனா, தடுப்பூசி, coronavirus vaccine, prevent, Stop anti vaccination, vaccine judged safe
கொரோனா தடுப்பூசி மாதிரி புகைப்படம்!

லண்டன், அக்டோபர் 18, 2020: இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு மிகவும் அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு இந்த கிறிஸ்துமஸ் நேரத்தில் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று இங்கிலாந்து தடுப்பூசி பணிக்குழு தலைவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜோனதன் வான் டாம் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசும் போது,

“ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி மற்றும் அஸ்ட்ராஜெனெகாவால் தயாரிக்கப்படும் தடுப்பூசி கிறிஸ்துமஸ்க்குப் பிறகு பயன்பாட்டுக்கு வந்துவிடலாம்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் கேட் பிங்காம் கூறுகையில், “கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்களுக்கு கிறிஸ்துமஸ் நேரத்தில் தடுப்பூசி வழங்கப்படலாம். யாருக்கு முதலில் தடுப்பூசி அளிப்பது என்பதை அரசு முடிவு செய்யும்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “கொரோனா தடுப்பூசி என்பது மக்களின் வாழ்வை ஒரே நாளில் பழைய இயல்புநிலைக்குத் திருப்பிக் கொண்டு போய் சேர்த்துவிடும் என்று கூற முடியாது. அனைவருக்கும் இது பாதுகாப்பு அளிக்கும் என்றும் கூற முடியாது.

இந்த தடுப்பூசி பலரை கொரோனா வைரஸ் பரவலிலிருந்து காப்பாற்றும். சிலருக்குத் தொற்று காரணமாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

தற்போதைய சூழலில் ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கூட போடக் கூடிய நிலை ஏற்படலாம்.

இந்த தடுப்பூசியில் பல மறுசீரமைப்புகள் செய்ய வேண்டியிருக்கும். முழுமையானதாகக் கிடைக்க சில ஆண்டுகள் ஆகலாம்.

ஒரு தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும் போது சில கட்டுப்பாடுகள் இருக்கும். எல்லோருக்கும் அது அனுமதிக்கப்பட மாட்டாது.

அந்த விதிகள் கொரோனா தடுப்பூசிக்கும் பொருந்தும். எனவே, யாருக்குத் தடுப்பூசி முதலில் போட வேண்டும் என்பதை அரசும் தடுப்பூசி மற்றும் நோய்த் தடுப்புக்கான கூட்டுக் குழு முடிவு செய்யும்.

தற்போது உலக அளவில் நூற்றுக் கணக்கான தடுப்பூசிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில் ஆறு சாத்தியமான தடுப்பூசிகள் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டுள்ளன” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter