டிசம்பர் 1 முதல் கொரோனா தடுப்பூசி? – ஹென்காக் வெளியிட்ட முக்கிய தகவல்

NHS coronavirus vaccine, கொரோனா
(Image: PA Wire)

வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி வழங்க என்.ஹெச்.எஸ் தயாராகி வருவதாக சுகாதாரத் துறைச் செயலர் மெட் ஹென்காக் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி தொடர்பான முக்கிய அறிவிப்பை சுகாதாரத் துறை செயலர் மெட் ஹென்காக் இந்த வாரம் அறிவிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது கிறிஸ்துமசுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைப்பது சாத்தியமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கிறிஸ்துமசுக்கு முன்பு என்பது சாத்தியமே!

டிசம்பர் 1ம் தேதி முதல் தடுப்பூசி கிடைக்க தேசிய சுகாதார சேவையுடன் இணைந்து தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த டிசம்பரில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு போடப்படும்.

அதே நேரத்தில் மிகப் பெரிய அளவில் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணி ஜனவரியில் தொடங்கப்படும். எனவே, பொது மக்கள் பொறுமை காக்க வேண்டும்.

மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பது பற்றி எங்களுக்குத் தெரியவில்லை.

அதே நேரத்தில் தடுப்பூசியைப் போட பொது மருத்துவர்களுக்கு 150 மில்லியன் பவுண்ட் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும். தடுப்பூசிகள் கேர் ஹோம்ஸ், கிளீனிக் போன்ற இடங்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த இடங்களில் வாரத்துக்கு ஏழு நாட்களும் தடுப்பூசி போடப்படும். இது தவிர விளையாட்டு அரங்கம் போன்ற இடங்களிலும் கூட கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

தற்போது மிக விரைவாக கொரோனா பரிசோதனைகளைக் கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் பரிசோதனை முடிவு வந்துவிடுகிறது.

இந்த புதிய முறையின் கீழ் லிவர்பூல் நகரில் மிகப்பெரிய அளவில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

தடுப்பூசி தயார் என அறிவித்த நிறுவனம்!

90 சதவிகிதம் அளவுக்கு கொரோனாவைத் தடுக்கும் தடுப்பூசி தயாராகிவிட்டது என்று திங்கட்கிழமை (நவம்பர் 9) Pfizer and BioNTech நிறுவனம் அறிவித்தது.

இது ஆர்.என்.ஏ வகை வைரஸ் என்றும், தற்போது இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ள 11 தடுப்பூசிகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.

தடுப்பூசி தயார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், டிசம்பர் 1ம் தேதிக்குப் பிறகு மக்களுக்கு அதைப் போடத் தயாராகி வருவதாக சுகாதாரத் துறைச் செயலர் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்று வாய்ப்பு அதிகம் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கே முதலில் தடுப்பூசி போடப்படும் என்று வேல்ஸ் அரசு அறிவித்துள்ளது!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter