இங்கிலாந்தில் மூன்று மாதத்தில் கொரோனா தடுப்பூசி? – டைம்ஸ் இதழில் வெளியான தகவல்

Coronavirus vaccine, Oxford, shows. கொரோனா, தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி மாதிரி புகைப்படம்! (Image: moneycontrol.com)

லண்டன், அக்டோபர் 3, 2020: இங்கிலாந்தில் அடுத்த மூன்று மாதங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று பிரபல டைம் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகமே கிட்டத்தட்ட 9 மாதங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இரண்டாம் கட்ட அலை தொடங்கியுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் உயிரிழப்பு ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

அங்கு எப்போது தொற்று தடுத்து நிறுத்தப்படும் என்ற அறிகுறியே தென்படவில்லை என்பதால் உயிரிழப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் 2ம் கட்ட பரவல் காரணமாக நாடு முழுக்க ஆங்காங்கே ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.

அதே நேரத்தில் தினசரி தொற்று ஏழாயிரத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஆங்காங்கே கொரோனா அவுட் பிரேக் பற்றிய தகவல் வந்து பீதியை ஏற்படுத்துகின்றன. இந்த மாதம் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் சார்பில் தடுப்பூசி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த தடுப்பூசி இன்னும் மூன்று முதல் ஆறு மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரபல டைம் இதழுக்கு விஞ்ஞானிகள் அளித்துள்ள பேட்டியில், “ஆகஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனெகா இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியை ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (இ.எம்.ஏ) ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.

இந்த ஆய்வு வெற்றிகரமாக முடிவடைந்தால் 2021ம் ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு குழந்தைகள் தவிர்த்து பெரியவர்கள் அனைவருக்கும் ஆறு மாத காலத்திற்குள் முழுமையாக தடுப்பூசி போடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசியை மக்கள் அனைவருக்கும் போட மருத்துவ ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நாடு முழுவதும் தடுப்பூசி மையங்களை அமைக்கவும், இந்த பணிகளில் ராணுவத்தை ஈடுபடுத்தவும் பிரிட்டன் அரசு யோசித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரசு 10 கோடி தடுப்பூசிகளுக்கு ஆர்டர் செய்துள்ளதாம். அதிக பரவல் வாய்ப்பு அடிப்படையில் முதியவர்களுக்கு முதலில், இளம் வயதினர் பிறகு நடுத்தர வயதினருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ, சில மாதங்களில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் போதும் என்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter