செவ்வாய் கிழமை முதல் நான்கு வார முழு ஊரடங்கு? – பீதியில் கடைகளை முற்றுகையிட்ட மக்கள்

Panic buyers, shops, ஊரடங்கு, கொரோனா, கட்டுப்பாடு
(Image: Zenpix)

செவ்வாய் கிழமை முதல் நான்கு வார ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கடைகளில் கூடியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா உயிரிழப்புகள் மிகப்பெரிய அளவில் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இதனால், முழு ஊரடங்கு வராது என்று கூறி வந்த பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கை அறிவிக்க தயாராகிவிட்டார்.

இன்று மாலை ஐந்து மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அது 6.30 மணிக்கு மாற்றப்பட்டுவிட்டது.

இதற்கிடையே ஊரடங்கு தொடர்பான பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன்படி, பப், பார், ரெஸ்டாரண்ட்களில் மக்கள் அனுமதிக்கப்படுவது ரத்து செய்யப்படுகிறது.

டேக் அவே, டெலிவரி ஆகியவை மட்டும் அனுமதிக்கப்படும்.

நர்சரி மற்றும் பள்ளிகள் திறந்திருக்கும். தேவையெனில் அவற்றை மூட அனுமதி அளிக்கப்படும்.

அத்தியாவசிய பணி தவிர்த்து மற்ற சர்வதேச பயணங்கள் தடை செய்யப்படும்.

அத்தியாவசிய தேவையற்ற கடைகள் மூடப்படும். சூப்பர் மார்க்கெட்கள் வழக்கம் போல செயல்படும்.

தேசிய அளவில் குடும்பங்கள் ஒன்று கலத்தல் தடை செய்யப்படுகிறது.

உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகள் தொடர்ந்து செயல்படலாம். நாடாளுமன்றம் திறந்திருக்கும்.

நவம்பர் 3ம் தேதி தொடங்கும் ஊரடங்கு டிசம்பர் 2ம் தேதி வரை இருக்கும்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை காக்கும் வகையில் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

இந்த விதிமுறைகள் இங்கிலாந்துக்கு மட்டும் பொருந்தும். ஸ்காட்லாந்து, வேல்ஸ் தங்களுக்கான கட்டுப்பாடுகளை அறிவித்துக்கொள்ளும்.

இங்கிலாந்து மீண்டும் முழு கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது என்று செய்தி வெளியானதில் இருந்து ஏராளமான மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க சூப்பர் மார்க்கெட்களில் குவிந்துள்ளனர்.

சமூக இடைவெளியின்றி, நெரிசலாக அவர்கள் ஒரே நேரத்தில் வந்திருப்பது மேலும் தொற்றுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

பிரிட்டனில் மொத்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10,11,660 ஆக அதிகரித்துள்ளது. இதில் 46,555 பேர் உயிரிழந்துள்ளனர். 1,69,003 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 14 நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 326 பேர் உயிரிழந்துள்ளனர். 21,915 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தினமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 1,444 ஆக உள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter