பள்ளிகள் மிகவும் பாதுகாப்பானது… குழந்தைகளை அனுப்பும்படி போரிஸ் ஜான்சன் கோரிக்கை

கொரோனா, children, school, Boris
(Image: PA Media)

நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பெற்றோர் கவலையின்றி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரிக்கவே ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கொரோனா பரவல் அதிகமாக உள்ள சூழலில் பள்ளிகள் திறக்கப்படுவது சரிதானா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

லண்டன் மற்றும் தென் கிழக்கின் சில பகுதிகளில் தொற்று அதிகமாக உள்ளது என்பதால் திங்கட்கிழமை தொடக்கப் பள்ளிகள் இரண்டு வாரங்களுக்குத் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மற்ற பகுதிகளுக்கும் அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிபிசி-க்கு பேட்டி அளித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் நாளை பள்ளிகள் திறக்கப்படும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கும்படி பெற்றோரை கேட்டுக்கொண்டுள்ளார்.

பள்ளிகள் மிகவும் பாதுகாப்பான இடம். எனவே, பெற்றோர் அது பற்றி சந்தேகம் கொள்ள வேண்டாம் என்றும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு தான். அதே நேரத்தில் கல்வியால் மாணவர்களுக்கு கிடைக்கும் பலன்கள், நன்மைகள் மிகப் பெரியது என்றார்.

லண்டன் மற்றும் தென் கிழக்கில் பள்ளிகள் மூடப்பட்டதற்கு இந்த பகுதியில் புதிய மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதே காரணம் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக எந்த ஒரு பதிலையும் வழங்கவில்லை. அதே நேரத்தில் “இந்த விவகாரத்தில் நாம் யதார்த்தமாக நடந்துகொள்ள வேண்டும். புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அது என்.ஹெச்.எஸ் செயல்பாடுகளில் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது” என்றார்.

இதற்கிடையே பல கவுன்சில்களும் பள்ளிகள் மூட அனுமதிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றன. கென்ட் கன்ட்ரி கவுன்சில் இது தொடர்பாக கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது போல பல கவுன்சில்கள், நகர சபைகளும் அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter