கொரோனா ஊரடங்கை விடுமுறை போலக் கொண்டாடும் மக்கள்… திண்டாடும் என்.எச்.எஸ்!

கொரோனா, first weekend lockdown
(Image: Bournemouth News)

கொரோனா முழு ஊரடங்கை மக்கள் விடுமுறை தினம் போல பூங்கா, கடற்கரைகளில் கூடி கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே மருத்துவ பணியாளர்கள் மத்தியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் என்.எச்.எஸ் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து நான்கு வார முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர்த்து மற்றவை மூடப்பட்டுள்ளன. வீட்டில் இருந்தே வேலை செய்ய பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும் பிசினஸ் சென்டர்கள் களையிழந்து காணப்படுகின்றன.

மக்கள் இதை விடுமுறை கொண்டாட்டம் என்பது போல கருதி பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் பொழுதைக் கழித்து வருகின்றனர்.

உடற்பயிற்சி, வாக்கிங் என்ற பெயரில் சமூக இடைவெளி பற்றிய கவலையின்றி, மாஸ்க் அணியாமல் ஏராளமானோர் நடமாடி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது.

லண்டன், மான்செஸ்டர், போர்த்மவுத், கேம்பிரிட்ஜ் என நாடு முழுக்க எல்லா நகரங்களும் பிச்சியாகவே காணப்பட்டன.

சாலையோர உணவு கடைகள், கிறிஸ்துமஸ் பொருட்களை விற்கும் கடைகளில் கூட்டம் நிறைந்திருந்தது.

அதே நேரத்தில் ஐரோப்பாவின் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஆக்ஸ்போர்டு தெரு அமைதியாக காணப்பட்டது. பேஷன் மற்றும் சிறிய உணவு கடைகளுக்கு பெயர் பெற்ற ரீஜண்ட் ஸ்ட்ரீட்டும் அமைதியாக இருந்தது.

இதற்கு முன்பு கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளை சிலர் மீறியதால்தான் முழு ஊரடங்கு வந்தது என்று அமைச்சர் கூறியிருந்தார். இப்போதும் அதே அலட்சியம் தொடர்வது கண்கூடாகத் தெரிகிறது.

என்.எச்.எஸ்-ல் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் சூழலில் மக்கள் ஊரடங்கு பற்றிய கவலையின்றி வெளியே சுற்றி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து ஊரடங்கைப் புறக்கணிப்பதால் என்.எச்.எஸ் பணியாளர்களின் வேலை பளுதான் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சனிக்கிழமை மட்டும் 24,957 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், இங்கிலாந்தில் 90 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அதே போல் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் 110 பேரில் ஒருவருக்கும், வடக்கு அயர்லாந்தில் 75ல் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter