இரு மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா… போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை!

national, Covid, lockdown, ஊரடங்கை, போரிஸ் ஜான்சன், கொரோனா
(Image: tamilmicset.com)

இங்கிலாந்தில் கொரோனா தொற்று காரணமாக இரு மடங்கு அதிக பாதிப்பு ஏற்படலாம் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோரத்தாண்டவம் ஆடியது கொரோனா. அதன் பிறகு ஜூன், ஜூலையில் கொரோனா கட்டுக்குள் வந்தது போல இருந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதத்தின் இறுதியிலிருந்து மீண்டும் கொரோனா சூடுபிடிக்கத் தொடங்கியது.

அப்போதிலிருந்தே முழு ஊரடங்கு ஒன்று மட்டுமே தீர்வு என்று நிபுணர்கள் எச்சரித்து வந்தனர். ஆனால், அதை ஏற்க அரசு மறுத்துவிட்டது. தற்போது நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, ஊரடங்கை அமல்படுத்தும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.

ஊரடங்கு தொடர்பான ஒப்புதலைப் பெற நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதம் தொடங்கியது. ஊரடங்குக்கு தொழிலாளர் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளதால்.

இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருவதில் எந்த தடையும் இல்லை. அதே நேரத்தில் ஏன் இவ்வளவு தாமதமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது என்று தொழிலாளர் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதமர்…

நாடாளுமன்றத்தின் மக்களவையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், “கடந்த சனிக்கிழமை மாலை தலைமை மருத்துவ அதிகாரியும் தலைமை அறிவியல் ஆலோசகரும் கொரோனா 2ம் அலை பரவல் குறித்து விவரித்தார்கள்.

நாடு முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். குறிப்பாக அதிக பாதிப்புள்ள பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும் கொரோனா தொற்று விகிதம் எனப்படும் ஆர் விகிதம் என்பது இங்கிலாந்தின் அனைத்துப் பகுதிகளிலும் அதிகமாகவே இருந்தது. ஐரோப்பாவில் உள்ளதைக் காட்டிலும் இது அதிகம்.

வைரஸ் முன்பு இருந்ததைக் காட்டிலும் மிக மோசமான முறையில் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது ஏராளமான நோயாளிகள் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கியுள்ளனர்.

சில மருத்துவமனைகளில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இருந்த நோயாளிகளை விட அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமையைக் காட்டிலும் இந்த ஞாயிற்றுக் கிழமை 2000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் டிசம்பர் 2ம் தேதி முதல் முழு ஊரடங்கு கொண்டு வரப்படுகிறது.

இருப்பினும் கல்வி நிலையங்களுக்கு செல்பவர்கள், வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பில்லாதவர்கள், வெளிப்புற உடற்பயிற்சி செய்பவர்கள், மருத்துவ தேவைக்காக வெளியே செல்பவர்கள்,

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கச் செல்பவர்கள், உதவித் தேவைப்படுபவர்களுக்கு உதவிகள் வழங்கச் செல்லும் தன்னார்வலர்கள் வெளியே செல்ல  அனுமதிக்கப்படுவார்கள்.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும். கிளிக் அன்ட் கலெக்ட் சேவைகள் தொடரும். எனவே, மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி அடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

அதே நேரத்தில் அத்தியாவசியமற்ற கடைகள், ஓய்வு, பொழுதுபோக்கு சேவை வழங்கும் இடங்கள், அழகு உள்ளிட்ட தனிப்பட்ட நலம் வழங்கும் இடங்கள் மூடப்பட்டிருக்கும்.

உணவு சேவைத் துறையைப் பொருத்தவரை ஆர்டர் செய்து பெற்று செல்வது, வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்வது அனுமதிக்கப்படும். மற்றபடி உணவகங்களுக்கு சென்று உட்கொள்வது தடை செய்யப்படும்.

ராணுவம் வரவழைப்பு…

முழு நகரத்தையும் சோதிக்க, கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவும் ராணுவம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நோய்க்கான உயிர் காக்கும் சிகிச்சைகள் வழங்கப்படுவதில் நாம் முன்னோடியாக இருக்கிறோம்.

அடுத்த முதல் காலாண்டில் தடுப்பூசி கிடைத்துவிடும் வாய்ப்பும் உள்ளது. அதே நேரத்தில் அதிநவீன சோதனைகள் வழங்குவதற்கான திட்டமும் செயல்பட்டு வருகிறது.

இவை அனைத்தும் வர உள்ள வசந்த காலத்தில் இந்த வைரஸ் கிருமியை நம்மால் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அடுத்த நான்கு வாரங்களுக்கு என்.ஹெச்.எஸ்-ஐ பாதுகாக்கவும், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காக்கவும் நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter