பிரிட்டிஷ் இளவரசர் ஹாரிக்கு வேலை தருகிறோம் – பர்கர் கிங் நிறுவனம்

பிரிட்டிஷ் அரச குடும்பத்திலிருந்து விலகிய ஹாரிக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை தருவதாக பிரபல ‘பர்கர் கிங்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸின் இளைய மகன் ஹாரி. இவர் கடந்த 2018 மே 19-ம் தேதி அமெரிக்காவை சேர்ந்த நடிகை மேகன் மெர்கலை காதல் திருமணம் செய்து கொண்டார். வெள்ளையின தந்தை, கருப்பின தாய்க்கு பிறந்த மேகன் மெர்கலுக்கு அரச குடும்பத்தினர் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதால் அரச குடும்பத்தினர் பொதுமேடைகளில் அவதூறாக பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை வதந்தி என்று வழக்கம்போல் இங்கிலாந்து அரச குடும்பம் அறிவித்தது.

அரசு குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகும் இளவரசர் ஹாரி – எதிர்காலம் என்ன?

இந்நிலையில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக இளவரசர் ஹாரியும் மேகன் மெர்கலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர். அரச பரம்பரை சொத்து வேண்டாம் என்றும் சொந்தமாக உழைத்து முன்னேறுவோம் என்றும் இருவரும் உறுதிபட கூறியிருந்தனர்.

இளவரசர் ஹாரி – மெக்கலின் முடிவு குறித்து கடந்த திங்கட்கிழமையன்று (13.01.2020) இங்கிலாந்து ராணி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் ஹாரி மற்றும் மெக்கலின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், அரச குடும்பம் இதற்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து டிரெண்டாகி வந்தது. இந்த டிரெண்டிங்கை பயன்படுத்திக் கொள்ள விரும்பிய பிரபல பர்கர் நிறுவனமான ‘பர்கர் கிங்’ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை நேற்று (16.01.2020) வெளியிட்டது. அதில் ஹாரியை குறிப்பிட்டு “இந்த அரச குடும்பம் பகுதி நேர வேலைகளை வழங்குகிறது” என்று கூறியிருந்தது.

தனது மற்றொரு ட்வீட்டில் “எங்களுடைய ராஜ்ஜியத்தில் உங்களுக்கு எப்போதும் வேலை உண்டு” என்றும் குறிப்பிட்டுள்ளது.

‘பர்கர் கிங்’கின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ’பர்கர் கிங்’ நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் 17,796 கிளைகள் உள்ளன.

சாப்பாட்டின் மீது ஒரு கண் வையுங்கள்.. பார்வை பறிபோகலாம் – பிரிட்டன் ஆய்வு எச்சரிக்கை