இங்கிலாந்து செப்டம்பரில் பள்ளிகள் தயாராகிவிடும்! – அமைச்சர் உறுதி

பள்ளிகள் செப்டம்பரில் திறக்க தயாராகிவிடும் என்று அமைச்சர் பேட்டி (Image: telegraph.co.uk)

கொரோனாவுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவது சவாலாக உள்ளது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி இருந்தது.

பள்ளிக்கூடம் திறப்பு விவகாரத்தில் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து தனித்தனித் திட்டங்கள் வைத்திருக்கும் நிலையில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் பற்றி விளக்கம் கேட்கப்பட்டது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை ஆசிரியர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்று NASUWT பொதுச் செயலாளர் பேட்ரிக் ரோச் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் செப்டம்பரில் பள்ளிகள் செயல்படத் தயாராகிவிடும் என்று வீட்டு வசதி செயலாளர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார்.

பிபிசிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் வகுப்பறையில் நேருக்கு நேர் சந்திக்க வேண்டியது அவசியமாகிறது.

செப்டம்பர் மாதம் குழந்தைகள் பள்ளிக்குத் திரும்பும் வகையில் கோடைக் காலத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதைத் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து கண்காணித்து வருகிறோம். பள்ளிகள் திறப்பதே அரசின் முன்னுரிமையாக உள்ளது. செப்டம்பரில் பள்ளிகள் திறக்கப்படும்போது அது பாதுகாப்பானதாக இருக்கும்.

வீட்டு வசதி அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் (Image: PA)

பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளோம். நிச்சயமாக ஆகஸ்ட் மாதத்திலும் தலைமை ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறோம். வழிகாட்டுதலின் அடிப்படையில் பள்ளிகள் எப்படி பாதுகாப்பாக செயல்பட முடியும் என்பது பற்றி அவர்கள் இறுதி செய்வார்கள்.

உண்மையில் இது நாட்டின் மிக முக்கியமான பிரச்னை. கடந்த மாதங்களில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றதைப் பார்த்த பெற்றோர் வகுப்பறைக்குச் சென்று படிப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்துள்ளனர்” என்றார்.

செப்டம்பர் மாதம் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அரசு கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தை நாடு தழுவிய அளவிலும், பிராந்திய அளவிலும் கண்காணிக்க வேண்டும். பள்ளிகள் தரப்பில் அரசு ஒளிவுமறைவின்றி செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் பேட்டி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk