ஸ்காட்லாந்தின் பியர் கார்டன்கள் மீண்டும் திறப்பு! – முதல் அமைச்சர் நிக்கோலா ஆய்வு

15 வார ஊரடங்குக்குப் பிறகு ஸ்காட்லாந்தின் பியர் கார்டன்கள் மற்றும் நடைபாதை கஃபேக்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. அதிக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஊரடங்குக்கு முந்தைய காலத்தில் இருந்ததை போன் அல் பிரஸ்கோ சாப்பிடுவது மற்றும் அருந்துவது இருக்காது என்று வாடிக்கையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மிகக் கடுமையான சமூக இடைவெளி மற்றும் சுகாதார விதிமுறைகள் காரணமாக இந்த பியர் கார்டன்களுக்கு வருபவர்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனாத் தொற்று மீண்டும் ஏற்பட்டால் வந்து சென்றவர்களைக் கண்டறிவது எளிதாக இருக்க பெயர் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இங்கு பப் மற்றும் ரெஸ்டாரண்ட்கள் தங்கள் உள் அரங்கில்  ஜூலை 15ம் தேதி முதல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர். வாடிக்கையாளர்கள் மிகவும் பாதுகாப்பாக உணவு சாப்பிடுவது மற்றும் அருந்துவதை நிறுவன உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எடின்பெர்க் கோல்ட் டவுன் பியர் கார்டனுக்கு சென்ற ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜியன் கூறுகையில்,  மீண்டும் இந்த பியர் கார்டன் திறக்கப்படுவதையொட்டி இதன் உரிமையாளர்கள் செய்துள்ள ஏற்பாடுகள் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பது வேதனையாக உள்ளது. நீங்கள் வெளியே ஒரு இடத்துக்கு செல்கின்றீர்கள். அந்த இடத்தில் சுத்தம், சுகாதாரம் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை, பாதுகாப்பு விதிகள் சரியாக கடைபிடிக்கவில்லை என்றால், உடனடியாக அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும், அல்லது உள்ளே செல்லலாமா என்று முதலில் யோசிக்க வேண்டும்.

தொற்று நோய் பரவலுக்கு முன்பு இருந்ததைப் போலவே அந்த இடம் எந்த மாற்றத்துக்கும் ஆளாகாமல் இருந்தால் அங்கு ஏதோ தவறு உள்ளது, பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியாகக் கையாளவில்லை என்று புரிந்துகொள்ள வேண்டும். நாம் விதிமுறைகளை தொடர்ந்து உறுதியாக கடைபிடித்து வந்தால் கொரோனா வைரஸ் பரவல் கீழே வந்துவிடும், இதுவரை கட்டுப்பாட்டுடன் இருந்த வாழ்க்கை முறை ஒரு சில வாரங்கள், மாதங்களில் முற்றிலும் மாறிவிடும். அதுவரை உள்ளூர் தொழில் துறையினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை. சமூக பாதுகாப்பு மிக முக்கியம்… எந்த அளவுக்கு நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு மற்றவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.