3 இங்கிலிஷ் புல்டாக் கடத்தல்… ஆன்லைனில் 9,000 பவுண்ட் விலை போகுமாம்!

Bulldog, puppies, stolen, புல்டாக், நாய்க்குட்டி
படம்: எசெக்ஸ் போலீஸ்

எசெக்ஸில் வீட்டுக்குள் புகுந்து மூன்று புல்டாக் வகை நாய்க் குட்டிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இவற்றின் மதிப்பு 9000 பவுண்ட் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

எசெக்ஸில் பசில்டனின் டென்வே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.50 மணி அளவில் ஒரு வீட்டுக்குள் மூன்று மர்ம நபர்கள் வலுக்கட்டாயமாக நுழைந்துள்ளனர்.

அந்த வீட்டில் இருந்த பெண்ணின் முகத்தில் ஸ்ப்ரே ஒன்றைத் தெளித்துவிட்டு வீட்டில் இருந்த மூன்று புல்டாக் நாய்க்குட்டிகளை அவர்கள் திருடிச் சென்றனர்.

இந்த குட்டிகளின் வயது மூன்று முதல் நான்கு வாரம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட நாயின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

திருடிச் சென்ற மூன்று பேரும் ஆறு அடி உயரம் இருந்துள்ளனர். அவர்கள் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். ஆசியா அல்லது சீனம் போல இருந்தது அவர்கள் மொழி.

இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் அது பற்றி தெரிவிக்கும்படி போலீஸ் தரப்பிலும், நாய்க்குட்டியைப் பறிகொடுத்த பெண்மணி தரப்பிலும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகும் தன்மை, விசுவாசம் ஆகியவற்றுக்காக புல்டாக் வகைகளை பலரும் விரும்புகின்றனர்.

இந்த நாய்க் குட்டிகள் ஆன்லைனில் 9,000 பவுண்ட் வரை விற்பனையாகும் என்று கூறப்படுகிறது. அதிக மதிப்பு காரணமாக இந்த நாய்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

திருடிச் சென்றவர்கள் கட்டாயம் அதை விற்பனை செய்ய முயற்சி செய்வார்கள். எனவே, நாய்க் குட்டிகள் விற்பனை என்று சோஷியல் மீடியாவில் பதிவு வந்தால் அது பற்றி போலீசிடம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதைப் படிச்சீங்களா: கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவதில் ஆர்வம் காட்டும் மக்கள்!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter