கிழக்கு லண்டன்: 8வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை… உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!

Poplar flat block fall Toddler critically injured
குழந்தை விழுந்த சம்பவம் நடந்த இடம். (Image: PA MEDIA)

கிழக்கு லண்டனில் எட்டாவது மாடியில் இருந்து சிறுகுழந்தை தவறி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு லண்டன் ஈஸ்ட் இந்தியா டக் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எட்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று ஜன்னல் வழியாக தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்து வந்த மருத்துவக் குழுவினர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். இன்று உயர் சிகிச்சைக்காக அந்த குழந்தை ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தையின் உடல்நிலை மோசமாக இருந்தாலும் சீராக உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “இரவு 7 மணி அளவில் குழந்தையுடன் கூட்டமாக நிற்பதைக் கண்டேன். அவர்கள் அந்த குழந்தைக்கு உதவி செய்ய வேண்டும் என்று துடித்தார்கள். ஆனால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தபடி இருந்தனர்” என்றார்.

அடுக்குமாடி குடியிருப்பின் காவலர் கூறுகையில், “குழந்தை மேலே இருந்து விழுந்த நிகழ்வால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். அந்த குழந்தையின் பெற்றோர் மிகவும் அருமையானவர்கள். நன்றாக பேசுவார்கள். இவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது மிகக் கொடூரம்” என்றார்.

அந்த கட்டிடத்தில் குடியிருப்பவர்கள் கூறுகையில், “இந்த கட்டிடத்தின் ஜன்னல் தொடர்பாக அச்சம் இருந்துகொண்டே இருந்தது. ஜன்னலைத் திறந்தால் ஒரு பெரிய ஆளே நுழையும் அளவுக்கு உள்ளது. இதனால் ஜன்னலைத் திறக்கவே பயமாக இருக்கும். உள்ளே மிக வெப்பமாக இருந்தாலும் கூட ஜன்னலை முழுமையாக திறக்க எனக்கு பயம்தான்” என்றார்.

ரஞ்சித் நாயக் என்பவர் கூறுகையில், “என் வீட்டில் ஒன்பது மற்றும் நான்கு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். குழந்தையின் ஜன்னல் கதவுகளைத் திறக்கும் சாவியை அவர்கள் கைக்கு எட்டும் வகையில் வைப்பதே இல்லை” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரையும் யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கூடுதல் தகவல் தெரிந்தால், புகைப்படம், வீடியோ என எதுவும் இருந்தால் மெட் போலீசை தொடர்புகொள்ளும்படி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்பு இதே போன்று பர்மிங்காமில் ஒரு குழந்தை இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk