வேலை இழப்பில் உச்சத்தை தொட்ட இங்கிலாந்து…. – மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை!

(Image: AFP)

கடந்த 2009ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் இங்கிலாந்தில் வேலை இழப்பு எண்ணிக்கை மிக மோசமான அளவுக்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நிலைமை இன்னும் மோசம் அடையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், இங்கிலாந்தின் தொழில்துறை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. கடந்த 2009 மே, ஜூன் முதலான காலக்கட்டத்தில் மிக மோசமான சரிவை அது சந்தித்துள்ளது.

இளம் பணியாளர்கள், அனுபவம் வாய்ந்த பணியாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் என அனைவரும் இந்த ஊரடங்கு காலத்தால் பாதிப்பை சந்தித்துள்ளனர் என்று ஆஃபீஸ் ஃபார் நேஷனல் ஸ்டாட்டஸ்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

2020 ஜூலை மாதத்துக்கான வரி தொடர்பான புள்ளிவிவரங்களை ஆராய்ந்த போது, நிறுவனங்களின் சம்பள பட்டியலில் 7,30,000 பேர் பெயர்கள் விடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது மிகப்பெரிய அளவில் வேலை இழப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்திருப்பதை காட்டுகிறது.

இது குறித்து ஆபீஸ் ஃபார் நேஷனல் ஸ்டாட்டஸ்டிக்ஸ் துணை தேசிய புள்ளியியல் ஆய்வாளர் ஜோனத்தன் கூறுகையில், “வேலையின்மையால் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் 24 மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்கள், மிகவும் வயதானவர்கள் மற்றும் திறன் அடிப்படையிலான வேலையில் இல்லாதவர்கள்தான். இவர்கள் பதிய வேலையைக் கண்டுபிடிப்பது என்பது மற்றத் தொழிலாளர்களைப் போன்று எளிதானது இல்லை” என்றார்.

உணவகங்கள் முதல் சில்லறை விற்பனையாளர்கள் வரை பல இங்கிலாந்து வர்த்தக நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 1.4 லட்சம் பணி நீக்கங்களைச் செய்துள்ளன. இது தவிர பணியில் உள்ளவர்களுக்கு ஊதிய குறைப்பு உள்ளிட்ட சிக்கல் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் நாட்களில் இங்கிலாந்தின் வேலைவாய்ப்பின்மை எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பொருளாதார பாதிப்புகள் பற்றி பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், “பொருளாதாரத்தின் சில பகுதிகள் மிகுந்த பின்னடைவைக் காட்டுகின்றன. வரும் காலங்களில் வளர்ச்சி வேகம் தட்டையானதாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது… கடக்க வேண்டிய தூரம் மிக அதிகமாக உள்ளது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk