அம்மாக்கள் கவனத்துக்கு… குழந்தைகள் வயிறு வலி என்றால் கொரோனாவாக கூட இருக்கலாம்! – இங்கிலாந்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை

(Image: healthline.com)

லண்டன், 3 செப்டம்பர் 2020: குழந்தைகள் வயிறு வலிக்கிறது என்று கூறினால் அது கொரோனாவின் அறிகுறியாகக் கூட இருக்கலாம் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிறு பிடிப்பு போன்றவையும் கூட கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் குயின்ஸ் பல்கலைக் கழக பெல்ஃபாஸ்ட் குழு குழந்தைகள் மத்தியில் கொரோனா தொடர்பாக கவனிக்க வேண்டிய செக்லிஸ்ட் ஒன்றை ஆய்வு செய்துள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இந்த அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்று அவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

பொதுவாக கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது காய்ச்சல், சளி, தொண்டை வலி, உணவின் சுவை தெரியாமை, நிறுவனம் வாசனை உணர முடியாமை போன்றவை உள்ளன.

இது தவிர, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் ஏற்கனவே குமட்டல் அல்லது வாந்தி, வயிற்றுப் போக்கு கூட கொரோனாவுக்கான அறிகுறிகள் என்று கண்டறிந்துள்ள நிலையில் இந்த குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

கொரோனாத் தொற்று ஏற்பட்டது என்று ரத்த பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்ட 992ம் குழந்தைகளின் உடல் நலம் தொடர்பாக இவர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த 992 குழந்தைகளில் 68 குழந்தைகளின் உடலில் கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருந்தை கண்டறிந்தனர்.

அப்படி என்றால் ஏற்கனவே ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டு மறைந்திருக்கிறது.

பெரும்பாலான குழந்தைகளுக்கு வழக்கமான அறிகுறிகளான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தாலும், சில குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிறு பிடிப்பு போன்ற பிரச்னை இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதில் நல்ல விஷயம் என்ன என்றால் இந்த 992 குழந்தைகளில் ஒருவரும் கூட உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு செல்லவே இல்லை.

இது குறித்து முன்னணி ஆய்வாளர் டாக்டர் டாம் வாட்டர்ஃபீல்ட் கூறுகையில், “பெரும்பாலான குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கண்டறிந்ததில் மகிழ்ச்சிதான். அதே நேரத்தில் குழந்தைகள் எந்த அளவுக்கு கொரோனாத் தொற்றைப் பரப்புகிறார்கள் என்பது கவலை அளிக்கிறது. வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிறு பிடிப்பு உள்ளிட்டவையும் கொரோனாவின் முக்கிய அறிகுறிகள் என்று தெரியவந்துள்ளது. கொரோனா பற்றிய அறிகுறிகளில் இதையும் சேர்ப்பது சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter