காற்றில் கொரோனா வைரஸ் பரவலாம்… உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

காற்றில் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை உலக சுகாதார நிறுவனம் தற்போது ஒப்புக்கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யு.கே-வில் மட்டும் 2.86 லட்சம் பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது. 44,391 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது. இருப்பினும் ஏழு ஹாட் ஸ்பாட் மையங்கள் உள்ளதாக சுகாதாரத் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் காற்றில் பரவாது, கொரோனா தொற்று உள்ள ஒருவர் தும்பும்போதும் இருமும் போதும் வெளிப்படும் நீர்த்துளிகள் விழும் பொருட்களில் பொருட்கள் மூலமாக வைரஸ் பரவும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த நீர்த்துளிகளை சுவாசிக்கும்போது, நம்முடைய வாயில் படும்போது கொரோனாத் தொற்று ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டது.
தற்போது விஞ்ஞானிகள் இருமல், தும்மலில் வெளிப்படும் கொரோனா கிருமி காற்றில் கலந்து மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதை கண்டறிந்துள்ளனர். இதன் அடிப்படையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் மாற்ற வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இது தொடாடர்பாக ஆய்வுக் கட்டுரையை பரிசீலனை செய்த உலக சுகாதார நிறுவனம் தற்போது, காற்றின் மூலம் பரவும் என்பதற்கான ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில்,”காற்றின் மூலம் கொரோனா பரவலாம் என்பதன் அடிப்படையில் புதிய பரிந்துரைகளை வழங்க நாங்கள் ஆலோசித்து வருகிறோம்” என்றார்.

அதே நேரத்தில் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தொழில்நுட்பத் தலைவர் பெனடேட்டா அலெக்ரான்ஸி, இந்த ஆய்வு ஆதாரங்கள் உறுதியானதாக இல்லை. அதே நேரத்தில் நெரிசலான, மூடிய, மோசமான காற்றோட்டம் கொண்ட பகுதிகளில் கொரோனா காற்றில் பர வாய்ப்புள்ளது என்பதை நிராகரிக்கவும் முடியாது. எனவே, இது பற்றி விரிவாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

கொரோனா காற்றில் பரவ வாய்ப்புள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது. இது உண்மை என்றால் சமூக இடைவெளி எந்த அளவுக்கு முக்கியமோ, அது அளவுக்கு மாஸ்க், சானிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்டவையும் அவசியமானதாக உள்ளது. எனவே, மக்கள் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்றினால் மட்டுமே கொரோனாவைத் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.