டிசம்பரில் ஊரடங்கு கட்டுப்பாடு எப்படி இருக்கும்? – இப்போது சொல்ல முடியாது என்று நழுவிய அமைச்சர்!

Christmas, rules, George Eustice
(Image: Facebook)

டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் சமயத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் 367 பேர் உயிரிழந்துள்ளனர்.

டிசம்பர் மாதத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது. கொரோனாத் தொற்று தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்களுக்கே முதலில் அவை போடப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்ற கேள்வி பிரிட்டிஷ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

டிஜிட்டல் முறையில் கொண்டாட்டத்துக்கு தயாராகும்படி ஸ்காட்லாந்து முதல்வர் நிக்கோலா கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கிறிஸ்துமஸில் நான்கு பிரிட்டன் நாடுகளிலும் கொரோனா வைரஸ் விதிகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் பிரிட்டனில் கிறிஸ்துமஸ் சமயத்தில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் இருக்கும் என்று சுற்றுச்சூழல் துறைச் செயலர் ஜார்ஜ் யூஸ்டினிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “கிறிஸ்துமஸ் நேரத்தில் என்ன மாதிரியான விதிகள் அமலில் இருக்கும் என்று இப்போது கூற முடியாது. அதற்கு இன்னும் நாட்கள் நிறைய உள்ளன.

தடுப்பூசி எப்போது தயாராகும், அது எந்த அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

முதல் தலைமுறை கோவிட் தடுப்பூசி அனைவருக்கும் பலன் அளிக்காமல் கூட செல்லலாம் என்று தடுப்பூசி பணிக்குழு தலைவர் கூறுவது ஒருவேளை உண்மையாகக் கூட இருக்கலாம்.

ஒரு கட்டத்தில் கொரோனா பிரச்னைக்கு தடுப்பூசிதான் விடையாக இருக்கும். ஆனால், அது எப்போது வரும் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது.

கிறிஸ்துமசுக்கு முன்னதாக வந்துவிடலாம் என்று சொல்லப்பட்டாலும் அதை நிச்சயமாக சொல்ல முடியாது” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter