குழந்தைகள் காப்பாற்றப்பட்டது அறிந்து கடைசியாக புன்முறுவல் செய்த அப்பா… உருக்கமான தகவல்!

உயிரிழந்த ஸ்டீவன்சன் தன்னுடைய குடும்பத்தினருடன். (Image: Laura Burford)

வேல்ஸில் கடலில் மூழ்கிய தன் குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த தந்தை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. கடைசியாக அவர் புன்முறுவல் செய்தார் என்று அவரது மகள் கூறியது நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்திருந்தது.

டெல்ஃபோர்டில் உள்ள வூட்ஸைட் பகுதியைச் சேர்ந்தவர் ஜோனத்தன் ஸ்டீவன்ஸ். வேல்ஸ் பார்மவுத் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 36 வயதான ஸ்டீவன்ஸ் தன்னுடைய குடும்பத்தினர் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தார். அவருடைய குழந்தைகள் கடலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவரது குழந்தைகள் கடல் அலையில் சிக்கவே ஸ்டீவன்ஸ் அவர்களைக் காப்பாற்றக் கடலில் இறங்கினார். ராட்சத அலையில் சிக்கி அவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது மகள் தி சன் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “கடல் அலையில் அவர் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்து மீட்புப் படையினரை அழைத்தோம். உடனடியாக அங்கு விரைந்த அவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். கடலுக்குள் இறங்கி அவரை வெளியே கொண்டு வர முயன்றனர். அவரை மீட்டுக் கொண்டு வந்தனர். அவர் அந்த நேரத்தில் அதிக அளவில் கடல் நீரை குடித்திருந்தார். அவரது நெஞ்சு முழுக்க கடல் நீரால் நிறைந்திருந்தது. அவருக்கு மருத்துவக் குழுவினர் சி.ஆர்.பி முதலுதவி அளித்தனர்.

எங்கள் கூக்குரலுக்கு மத்தியில் அவர் தன்னுடைய கண்களைத் திறந்து பார்த்து புன்னகைத்தார். நாங்கள் ஜோஷ்வா, லாசி மற்றும் ஜேக் மூவரும் நின்று கொண்டிருப்பதை பார்த்து சிரித்தார். அதன் பிறகு கண் மூடியவர் மீண்டும் திறக்கவே இல்லை.

தன்னுடைய சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி அப்பா கண் விழித்துப் பார்த்தார் என்று நினைக்கிறேன். நாங்கள் மூன்று பேரும் காப்பாற்றப்பட்டோம் என்று அறிந்த மகிழ்ச்சியில் அவர் நிம்மதியாக உயிர்விட்டிருப்பார்” என்றார்.

உயிரிழந்த ஸ்டீவன்ஸ் (Image: Farah Parsons)

நாடு முழுக்க கோடையின் கொடூரம் அதிகமாக உள்ள நேரத்தில் லட்சக் கணக்கான தந்தையர்களைப் போல ஸ்டீவன்சும் தன்னுடைய குடும்பத்தினருடன் கடற்கரையில் பொழுதைப் போக்க வந்தவர். கடல் நீரில் மிதக்கும் போர்டு ஒன்றை அவருடைய குழந்தைகள் லாரன், ஜோசுவா வைத்திருந்தனர். ஆழமற்ற பகுதியில் விளையாடும்படி கூறிவிட்டு அவர் கடற்கரையிலிருந்த குடும்பத்தினரிடம் வந்துள்ளார்.

திரும்பிப் பார்த்தபோது கடலில் இருந்து 25 மீட்டர் தூரத்துக்கு அவர்கள் உள்ளே சென்றிருப்பதை பார்த்த அவர் பதறியடித்து கடலுக்குள் சென்றுள்ளார். தன் உயிரைக் கொடுத்து போராடி குழந்தைகளை கடலின் பயங்கர நீரோட்டத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார். ஆனால் அவரை கடல் இழுத்துக் கொண்டது என்று உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளைக் காப்பாற்ற அவர் கடலுக்குள் இறங்கவில்லை என்றால் இந்நேரம் இரண்டு குழந்தைகளுக்கான இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடு நடந்திருக்கும் என்று உயிரிழந்த ஸ்டீவன்சின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். உண்மையில் அவர் பெரிய ஹீரோ என்று அவருடைய குழந்தைகள் தெரிவிக்கின்றனர். ஸ்டீவன்ஸ் குடும்பத்திற்கு உதவ அவரது நண்பர்கள் நிதி திரட்டும் திட்டத்தை ஆன்லைனில் தொடங்கினர். இன்று வரை அதில் 8000 பவுண்ட்டுக்கும் மேல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk