மூன்றாம் நிலை கட்டுப்பாட்டுக்குள் செல்லும் லண்டன்! – ஹென்காக் அறிவிப்பு

situation, end, lockdown, கொரோனா, ஊரடங்கு, London move tier
(Image: PA Media)

லண்டன் வருகிற புதன் கிழமை அதிகாலை முதல் மூன்றாம் நிலை கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது என்று சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் அறிவித்துள்ளார்.

லண்டன், எசெக்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் லண்டனில் கொரோனா மூன்றாம் நிலை கட்டுப்பாட்டை கொண்டுவர வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த சூழலில் லண்டன், எசெக்ஸின் சில பகுதிகள் வருகிற புதன் கிழமை அதிகாலை 12.01 முதல் மூன்றாம் நிலை ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் செல்வதாக சுகாதாரத் துறை செயலாளர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கென்ட், மெட்வே, ஸ்லஃப் பகுதிகள் ஏற்கனவே மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

இதனுடன் கிரேட்டர் லண்டன்,

எசெக்ஸின் தெற்கு மற்றும் மேற்கு (பசில்டன், ப்ரெண்ட்வுட், ஹார்லோ, எப்பிங் ஃபாரஸ்ட், கேஸில் பாயிண்ட், ரோச்ஃபோர்ட், மால்டன், பிரைன்ட்ரீ – செல்ம்ஸ்ஃபோர்ட், துர்ராக் மற்றும் சவுத்ஹெண்ட் -ஆன் – சீ பகுதிகள்)

ஹெர்ட்ஃபோர்ட்ஷையரின் தெற்கு பகுதிகள் (ப்ரோக்ஸ்போர்டன், ஹெர்ட்ஸ்மியர், வாட்ஃபோர்ட் உள்ளிட்ட பகுதிகள்) மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் செல்கின்றன.

நாடாளுமன்றத்தில் பேசிய மெட் ஹென்காக், “புதிய வகை கொரோனா வைரஸ் தெற்கு இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாத் தொற்று மிக செங்குத்தான, அதிவேக உயர்வுகளைக் காட்டுகிறது. இதைக் குறைக்க உடனடி நடவடிக்கை தேவை.

புதிய வகை வைரஸ் கிருமி வேகமாக பரவுகிறது. இந்த சூழலில் பரிந்துரைக்க எதுவும் இல்லை. ஆனால் விழிப்புடன் இருக்கவும் விதிமுறைகளை ஒவ்வொருவரும் பின்பற்றவும் வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்க ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என்றார்.

லண்டன் மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் செல்வதால்…

குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து மற்றவர்களை வீட்டுக்குள்ளோ, பொது இடங்களிலோ சந்திக்க முடியாது.

வெளியே பூங்கா, கடற்கரை போன்ற எல்லா இடங்களிலும் ஆறு பேர் விதி முறை பொருந்தும்.

கடைகள், ஜிம்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்கள், அழகு நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படும்.

பார்கள், பப்கள், கஃபேக்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்கள் வாடிக்கையாளர்களுக்கு மேசைகளில் உணவு வழங்கும் சேவையை மேற்கொள்ள முடியாது. டெலிவரி மற்றும் டேக்-அவே மட்டும் அனுமதிக்கப்படும்.

விளையாட்டு அரங்குகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளை காணலாம்.

உள் அரங்க பொழுதுபோக்கு இடங்கள், சினிமா உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும்.

மூன்றாம் நிலை கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் இரண்டு மற்றும் முதல் நிலை கட்டுப்பாடு உள்ள பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter