லண்டனில் வன்முறை, கொள்ளையைத் தடுக்க வின்டர் நைட் ரோந்து தொடக்கம்!

Winter Nights campaign, வின்டர் நைட், மெட் போலீஸ்
(Image: Met Police)

லண்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் வன்முறை மற்றும் கொள்ளையைக் கட்டுப்படுத்த வின்டர் நைட் என்ற ரோந்து பணியைத் தொடங்கியுள்ளதாக மெட் போலீஸ் அறிவித்துள்ளது.

லண்டன் பெருநகரில் பல இடங்களில் கத்திக் குத்து, வழிபறி போன்றவை நடப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் வன்முறைச் சம்பவங்கள், வழிபறி பணம் பறிப்பு போன்றவை அதிக அளவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இன்று (நவம்பர் 30) முதல் கிறிஸ்துமஸ் வரையில் லண்டன் முழுவதும் குற்றச்சம்பவங்களைச் சமாளிக்கும் விதத்தில் வின்டர் நைட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

வன்முறை குற்றங்கள் தடுப்பு படையினரும் இதர மெட்ரோபாலிடன் போலீஸ் துறைகளும் இணைந்து வின்டர் நைட்டை மேற்கொள்கின்றன.

உள்ளூர் அதிகாரிகள், சாலை மற்றும் போக்குவரத்து போலீசார், ஆப்பரேஷன் வெனிஸ், வன்முறை தடுப்பு பிரிவு, கொள்ளை தடுப்பு குழு என அனைவரும் இணைந்து தானியங்கி வாகன பதிவு எண் தகவல் திரட்டுதல் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆயுதங்கள் போன்றவை உதவியுடன் செயல்பட உள்ளனர்.

இதைப் படிச்சீங்களா: மூன்றடுக்கு கொரோனா கட்டுப்பாடு – எம்.பி-க்களுக்கு போரிஸ் ஜான்சன் விடுத்த அழைப்பு!

ஒவ்வொரு ஆண்டும் இந்த கால கட்டத்தில் மாலைப் பொழுது தொடங்கும் வேளையில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. அதிலும் குறிப்பாக கத்தியை வைத்து மிரட்டும் குற்றங்கள் அதிகரிக்கின்றன.

மக்கள் அதிக அளவில் ஷாப்பிங் செய்ய வரும் சூழலை அவர்கள் பயன்படுத்தி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வன்முறை கையாளுதல் பிரிவின் தலைவர் கமாண்டர் ஜேன் கார்னர்ஸ் இது குறித்து கூறுகையில், “எங்களுடைய முதல் இலக்கு குற்றங்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு நாளும் குறைப்பதுதான்.

வின்டர் நைட் என்பது எங்களின் அன்றாட பணியுடன் பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களைக் குறைப்பதற்கான முயற்சியாகும்.

லண்டன் மக்கள் மற்ற எந்த ஒரு நாட்களை விடவும் கிறிஸ்துமஸ் தருணத்தில் அதிக மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகின்றனர். அவர்களை வழிபறி, வன்முறையாளர்களிடம் இருந்து பாதுகாப்பது எங்கள் கடமை.

இது வெறும் கைது நடவடிக்கை மட்டுமல்ல… வன்முறையில் இறங்கும் இளம் தலைமுறையினர் மற்றும் இதிலிருந்து வெளிவர விரும்புகிறவர்களுக்கு ஆதரவு அளித்து, அவர்களுக்கு உதவி செய்து அவர்களின் பாதையை நேராக்குவதும் நோக்கமாகும். இதன் மூலம் அவர்களுக்கும் புத்தாண்டில் புதிய நம்பிக்கை கிடைக்கும்” என்றார்.

இன்று தொடங்கும் இந்த தீவிர கண்காணிப்பு பணி ஜனவரி 3ம் தேதி வரை தொடரும் என்று மெட் போலீஸ் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter