நோர்ஃபேக்: 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் என்று அறிவித்தப் பிறகு நடந்த இசை நிகழ்ச்சி! – தடுத்து நிறுத்திய போலீஸ்

கைப்பற்றப்பட்ட கருவிகள் (Image: ESSEX POLICE)

நோர்ஃபோக், 30 ஆகஸ்ட் 2020: இசை நிகழ்ச்சிகள் நடத்தினால் 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தும் நோர்ஃபோக் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் சட்டவிரோத இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதை போலீசார் தடுத்து நிறுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்களுக்கு வார இறுதி நாட்களில் இசை நிகழ்ச்சி இல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும் போல… இரவு ரேவ், இசை நிகழ்ச்சி சட்டவிரோத ஒன்று கூடல்களில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி, ஒன்று கூடல் நடத்துபவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்ட் வரை அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டது. இந்த புதிய உத்தரவு கடந்த வெள்ளிக்கிழமை நடைமுறைக்கு வந்தது.

அப்படி இருந்தும் துளியும் கவலையின்றி நோர்ஃபோக் வனப்பகுதியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) 500க்கும் மேற்பட்டோர் சட்டவிரோத ரேவ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒன்று கூடியதும், அதை போலீசார் தடுத்து நிறுத்திய நிகழ்வும் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை இரவு 23.20 மணி அளவில் தெட்ஃபோர்டு வனப் பகுதியில் அனுமதியற்ற இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பகுதிக்கு அதிக அளவில் கார்கள் வரவே சந்தேகத்தின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று திரண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கூடுதல் போலீஸ் படை மற்றும் ஆம்புலன்ஸ் சேவை அழைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவரின் உடல்நிலை திடீரென்று மோசமானதால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வெஸ்ட் யார்க்‌ஷேயரில் எட்டு பேருக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய இசைக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

எசெக்ஸ் போலீசார் பல ஆயிரம் பவுண்ட் மதிப்புடைய இசைக் கருவிகளை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் சூப்பிடிரெண்டென்ட் கிரிஸ் போவான் கூறுகையில், “இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் ஏற்படக்கூடிய அபாயங்களை அவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறோம். கூட்டத்தில் பங்கேற்ற பலரிடம் நிலவரத்தை விளக்கிய போது, தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கலைந்து சென்றது மகிழ்வைத் தந்தது. இதற்கிடையே போலீசார் ஆயிரக்கணக்கான பவுண்ட் மதிப்புடைய இசைக் கருவிகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

இது போன்ற இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களுக்கு என்னுடைய கடைசி எச்சரிக்கை… நீங்கள் இசை நிகழ்ச்சிக்குத் தேவையான கருவிகளை வாடகைக்கு வாங்கினீர்களா, எவ்வளவுக்கு வாங்கினீர்கள் என்பது பற்றி எல்லாம் எங்களுக்கு கவலையில்லை. உங்கள் இசை நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவோம். அனைத்தையும் நாங்கள் பறிமுதல் செய்வோம்.  மேலும், 10 ஆயிரம் பவுண்ட் வரை அபராதமும் விதிப்போம். மக்களுக்கு தொற்று பரவ காரணமாக இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்றார்.

நோர்ஃபோக்ஸ் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் இது போன்று சட்டவிரோத ரேவ்கள் நடத்தப்பட்டுள்ளது. அவை அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு, இசைக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிலர் வீம்புக்கு ஸ்பீக்கர் பாக்ஸை சாலையின் நடுவே வைத்து அதிக சப்தத்தை வைத்து விடுகின்றனர். போலீசார் வந்து விசாரிக்கும்போது அந்த ஸ்பீக்கர் பாக்சுக்கு யாரும் உரிமை கோருவது இல்லை. மக்களுக்கு தேவையில்லாத இடையூறுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்று போலீசார் வேதனை தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk