பிரிட்டனில் 61 ஆயிரத்தைக் கடந்த கொரோனா மரணம்!

கொரோனா, இங்கிலாந்து, Covid, UK, Death
(Image: PTI)

பிரிட்டனில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்துவிட்டதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

யுகே-வில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா தொற்று முதல் அலை காரணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர். கொரோனாவின் பின்விளைவுகளைப் பலரும் அனுபவித்து வருகின்றனர்.

கொரோனாவைத் தடுக்க முழு ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. இதனால், இங்கிலாந்தில் கொரோனா பரவல் குறைந்தது. கடந்த ஜூன், ஜூலையில் கொரோனாத் தொற்று மிகக் குறைவான அளவிலேயே இருந்தது.

முற்றிலும் கொரோனாத் தொற்று பரவலைத் தடுத்து நிறுத்த தவறியதன் விளைவாக ஆகஸ்ட், செப்டம்பரில் கொரோனா பரவல் வேகம் எடுத்தது.

அக்டோபரில் கடந்த மார்ச் மாதத்தில் கண்டறியப்பட்டதைக் காட்டிலும் அதிக நோயாளிகள் கண்டறியப்படும் நிலை ஏற்பட்டது.

மூன்று நிலை ஊரடங்கு, ஆறு பேர் விதி என கொரோனாவைத் தடுக்க அரசு திட்டங்களைத் தீட்டினாலும், அதை மீறுவதில் பெரும்பாலான மக்களும் உறுதியாக இருப்பதைக் காண முடிகிறது. இதன் காரணமாக கொரோனா மரணங்கள் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டது.

தற்போது, பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்து 61,116 ஆக அதிகரித்துள்ளது.

அரசின் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 59,927 ஆக இருந்தது. இந்த கணக்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து 28 நாட்களுக்குள் 1189 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 53 சதவிகிதம் அளவுக்கு கொரோனா மரணம் அதிகரித்துள்ளது என்று தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலக தகவல் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு 15 நாட்களில் மரணத்தின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது.

செப்டம்பர் 18ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 139 ஆக இருந்த மரணம், இரண்டு வாரங்கள் கழித்து 321 ஆக அதிகரித்தது. அக்டோபர் 16 வரையிலான வாரத்தில் அது 670 ஆக அதிகரித்தது.

இங்கிலாந்தின் குறிப்பிட்ட பகுதியில் என்று இல்லாமல் பரவலாக எல்லா பகுதிகளிலும் இறப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter